பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறும் கடினமான பணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முக்கியமான வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எப்படி நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Press Vs. Prez” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெறும்.
ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
2021 ஜூன் 23 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க 9வது பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தினம் முதல் தேசிய தலைமைத்துவ பயணம் வரை பத்திரிகைகளில் வெளியான சுமார் 600 கார்ட்டூன்களைத் திரட்டி இந்தப் நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
40 கேலிச்சித்திரக் கலைஞர்கள் மற்றும் சுமார் 20 பத்திரிகையாளர்கள் இந்த நூலுக்கு பங்களித்துள்ளனர், கேலிச்சித்திரக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் இந்த விழாவின் போது கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கேலிச்சித்திரக் கலைஞர் நாலா பொன்னப்பா விசேட விருந்தினராக பங்கேற்கவிருப்பதுடன், சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.
பேராசிரியர் ரொஹான் நெத்தசிங்க நூலாய்வு நிகழ்த்து உள்ள அதே வேளைஇந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள்,பாராளுமன்ற அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.