புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு 110 நாடுகளில் பரவியுள்ளது. BA – 4 BA – 5 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் திரிபு தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் திரிபுகளை விட புதிய வகை திரிபுகள் வீரியம் மிக்கவையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை வேகமாக பரவும் தன்மை கொண்டவை. இதனால் உலக சுகாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் சமூக மட்டத்தில் பரவும் பட்சத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரிக்கலாமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார வலயத்தில் 50 வீதமான பகுதியில் புதிய வகை கொவிட் வைரஸ் திரிபுகள் பரவியுள்ளன.
இதனால் கொவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 228 நாடுகளிலிருந்து 7 இலட்சத்து 30 ஆயிரம் வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.