இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடகச் செயலாளராக கடமையாற்றியவருமான பிரதீப் அனுரகுமார நேற்று (14) இரவு காலமானார்.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பிரதீப் அனுரகுமார அவர்கள், ஊடகத்துறையில் உள்ள அனைவருடனும் நல்ல புரிதலுடன் பணியாற்றிய நட்பு உள்ளம் கொண்டவர்.
அவர் இறக்கும் போது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஊடகச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.
முன்னாள் அமைச்சர்களான ரெஜி ரணதுங்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, டி.மு ஜயரத்ன மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
19.12.1971 இல் பிறந்த அவர்
இறக்கும் போது அவருக்கு 53 வயது.
மறைந்த பிரதீப் அனுரகுமார மினுவாங்கொடை, நாலந்த மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
அவர் திவயின செய்தித்தாளின் உள்ளூர் ஊடக தளத்தில் பணியாற்றுவதன் மூலம் ஊடகத்துறையில் நுழைந்தார், பின்னர் அவர் தேசிய தொலைக்காட்சி, ஹிரு எப்.எம், லக்ஹண்ட வானொலி, சிரச மீடியா நெட்வொர்க்குகள் மற்றும் தினகர செய்தித்தாள் ஆகியவற்றில் பணியாற்றினார். மேலும், பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களுக்கு கட்டுரைகள் இவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியை திருமதி சாகரிகா அபேவர்தனவின் அன்புக் கணவரும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
காலஞ்சென்ற பிரதீப் அனுரகுமாரவின் பூதவுடல் இல. 239/3, அரலிய உயன, மினுவாங்கொடை வீதி, கொடுகொட என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (17ஆம் திகதி) கொடுகொட மயானத்தில் இடம்பெறும்.