இந்திய வம்சாவழி மக்கள் தொழிலாளர்களாக ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
மலையகத்தில் இம்மக்களில் பெரும்பாலானோர் குடியமர்த்தப்பட்டதுடன் கணிசமானோர் மலையகத்திற்கு வெளியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.
அந்த வகையில் களுத்துறை மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவழி மக்களின் அரசியல் பிரவேசித்திற்கு வித்திட்ட களுத்துறை தமிழர் அரசியலின் தந்தையான அமரர் தங்கவேலு நடசேன் அவர்களின் 100ஆவது பிறந்த தினம் 26.01.2023 திகதி வியாழக்கிழமை அவர் வசித்த புலத்சிங்கள, கிறிஸ்தொம்பு பாம் தோட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.
காலஞ் சென்ற நடேசன் ஐயா ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தொழிற் சங்கப் பணிகளில் ஈடுபட்டு தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னின்று செயற்பட்டதுடன் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசியல் அநாதைகளாக இருந்த மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.
பொது வெளியில் அதிகம் பேசப்படாத களுத்துறை தமிழர்களின் அரசியலை நாடறியச் செய்யும் வகையில் தன்னால் இயலுமான வரை இறுதி வரையிலும் போராடினார்.
அதற்குரிய மக்கள் அங்கீகாரமாக புலத்சிங்கள பிரதேச சபையின் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். களுத்துறை மாவட்டத்தில் ஒரு தமிழர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்ததுடன் இதுவரையிலும் அச்சாதனை அவருக்கு மாத்திரமே சொந்தமானதாக இருக்கிறது.
தோட்டத் தொழிலாளியின் மகனாக தோட்ட மக்கள் எதிர்கொண்ட நாளாந்தப் பிரச்சினைகளின் போது அவர்களுக்கு உதவிடும் உற்றத் தோழனாக விளங்கியதுடன் தோட்ட மக்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, ஆலயங்களுக்கு இசை வாத்தியக் கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியமை மற்றும் தோட்டப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டமை என அடிப்படை வசதிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலப்பகுதியில் களுத்துறை மாவட்ட தோட்டப்புற மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியனவாகும்.
பிரதீப்