க.கிஷாந்தன்)
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டு வந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்தில் இருந்த வீடு இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அரவிந்த குமார் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், தோட்டத்தில் குமாஸ்தாவாக பணியாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டு அவர் ஹென்போல்ட் தோட்டத்தில் பிராதன குமாஸ்தாவாக கடமையாற்றியபோதே தோட்ட நிர்வாகத்தினால் அவருக்கு மேற்படி வீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி தோட்டத்தை விட்டு – தோட்ட சேவையில் இருந்து சென்ற பின்னரும் குறித்த இல்லத்தை அவர் தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்காது, நிர்வாகத்தின் அனுமதியின்றி அதனைப் புனரமைத்து பராமரித்து வந்துள்ளார்.
இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுத்தது. நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள வீட்டை விட்டு வெளியேறுமாறு அரவிந்தகுமாருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக அரவிந்தகுமார் மேன்முறையீடு செய்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனையடுத்தே லிந்துலை பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் குறித்த இல்லத்திற்கு சென்று அரவிந்தகுமாரின் தனிப்பட்ட உடமைகளை பட்டியலிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலின் பிரதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இல்லம் மற்றும் உடமைகள் தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரவிந்தகுமார் அரசியலுக்கு வந்த பிறகு, அரசியல் பலத்தை பயன்படுத்தியே குறித்த வீட்டை கையகப்படுத்தி வைத்திருந்தார் என தோட்ட நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரவிந்தகுமார் பயன்படுத்திய வீடு தோட்டத்தில் சேவையாற்றும் மற்றுமொரு அதிகாரிக்கு வழங்கப்படவுள்ளது.