சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று ஆரம்பமான 2023 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்சியின் சார்பில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்ற உறுப்பினர் ஒருவர் ,சவாலை ஏற்று நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து ,ஜனநாயகத்தை பலப்படுத்தி பொருளாதாரத்தை ஓரளவுக்கு பலப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியை பாராட்டினார்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின் மூலமும் தனது பொறுப்புவாய்ந்த தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
போராட்டத்துக்குப் பின்னர் முறைசாரா குழுவொன்று பாராளுமன்றத்தை கைப்பற்ற இருந்தது. அப்படி நடந்திருந்தால் இன்று இந்த வரவு செலவுத்திட்டம் இருந்திருக்காது. நாட்டின் சவாலை தனது கட்சியில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப்பெற்ற உறுப்பினர் ஒருவர் ஏற்றுக்கொண்டார். அவர்தான் திரு. ரணில் விக்கிரமசிங்க. கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் சவாலை ஏற்றுக்கொண்டதால் தான் இன்று இந்த வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க முடிந்தது. நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்தது. தற்போதைய நிதியமைச்சர் ஒரு சவாலான நேரத்தில் இந்த வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.