புகையிரதம், பஸ், பாடசாலை வாகன சேவை மற்றும் டக்சி சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தலைமையில் அண்மையில் (21) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்துத் துறையினர் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், போக்குவரத்துத் துறையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தமக்குக் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாக இதில் கலந்துகொண்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், பாடசாலை வான் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக வாகன டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலை 300% அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் வாகன உதிரிப்பாகங்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதால் பஸ், பாடசாலை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி அவற்றையும் உள்ளடக்கிய முன்மொழிவுகள் குழுவினால் முன்வைக்கப்படும் என உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரவணக தெரிவித்தார். இந்நாட்டில் உள்ள சகல போக்குவரத்துத் துறைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் கொண்டுவருவது பிரதான முன்மொழிவாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கை டிசம்பர் மாதம் தேசிய பேரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.