கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, திருப்பழுகாமம்- அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோயில்
மட்டுமா நிலத்திலே கோயில் கொண்ட பெருமாளே
மனம் நிறைந்த மகிழ்வு தந்து வாழவைப்பாய் திருமாலே
தளும்பலில்லா உறுதி தந்து வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்
கிழக்கிலங்கை பெருநிலத்தில் கோயில் கொண்ட பெருமாளே
கிலேசமில்லா மனம் தந்து வாழவைப்பாய் திருமாலே
குறைவில்லா அமைதி தந்து வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்
அன்னை மகாலட்சுமியுடன் கோயில் கொண்ட பெருமாளே
ஆறுதலை எமக்களித்து வாழவைப்பாய் திருமாலே
அரவணைப்பை உறுதிசெய்து வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்
காத்தருளும் கடமை கொண்டு கோயில் கொண்ட பெருமாளே
கவலை இல்லா மனம் தந்து வாழவைப்பாய் திருமாலே
குற்றமில்லா வாழ்வு தந்து வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்
அழகுமிகு திருக்கோயில் கோயில் கொண்ட பெருமாளே
ஆதரவை எமக்களித்து வாழவைப்பாய் திருமாலே
அச்சம் தவிர்த்தெமக்கு வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்
மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட பெருமாளே
மாண்பு நிறை வாழ்வளித்து வாழ வைப்பாய் திருமாலே
முன்னேறும் வழிதந்தெமக்கு வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும் மாதவன்தாள் போற்றிடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.