கம்பஹா மாவட்டம் வெள்ளப்பெருக்கினால் மூழ்குவதை தடுப்பதற்காக தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்பபுரை வழங்கினார்.
அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஜாஎல பிரதேச செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஜாஎல பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருடன் கலந்தாலோசித்து எனக்குத் தெரிவிக்கவும். பழைய வேலையை முடித்துவிட்டே மீண்டும் புதிய வேலையைத் தொடங்குகிறோம். முதல் கட்டமாக பெறப்படும் பணத்தில் 2020,2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய தவணைகளை வீட்டுக் கடன் மற்றும் உதவித் தொகை என்பன செலுத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் வீடுகளை மேம்படுத்துவதற்கு பணம் வழங்கப்படும். இதற்கு இப்போதே தயாராகுங்கள். பணம் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் கம்பஹா மாவட்டம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு தேசிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மினுவாங்கொடை, கம்பஹா நீரில் மூழ்கும்.எனவே இந்த கால்வாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இத்திட்டம் கடந்த ஆண்டு முன்னாள் ஆளுநர் தலைமையில் தொடங்கப்பட்டது.
பொதுவாக, அதிகாரிகளிடம் வேலை கேட்கும் போது பெரிய அளவிலான திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. திரு.பசில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் இருந்த போது கம்பஹா மாவட்டம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவ்வாறு செய்தது பெரிய காரியங்களைச் செய்வதால் அல்ல. அன்றாட வேலையைச் செய்வதாலே அவ்வாறு நடந்தது.. எனவே, அரச நிறுவனங்களை பிரித்து இந்த பணியை செய்யாதீர்கள். அனைத்து அரச நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுங்கள்.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போஷாக்கு நிலையை உயர்த்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளூராட்சி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சிகள், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கம் இணைந்து இந்த போசாக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஆலோசனை.
எனவே இந்த சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விவரங்களை உள்ளூராட்சி ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் தெரிவிக்கவும். எவ்வாறாயினும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ளூராட்சி வேட்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டாம். தேர்தல் சட்டங்களை மதித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையாளரிடமும் தெரிவித்துள்ளோம். இந்த போஷாக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவான பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துரையாடப்பட்ட அந்தந்தப் பகுதிகளைப் பாதிக்கும் விடயங்களின் துல்லியம் குறித்தும் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கவும். பொதுவாக ஒரு கிராமத்தில் 8 அரசு அதிகாரிகள் இருப்பார்கள். அந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கிராமத்தின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அறிவுரை வழங்கினோம். அந்த திட்டம் இன்னும் வெற்றிகரமாக செயல்படுவதாக தெரியவில்லை. ஆளுநர் தலைமையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வேலைத்திட்டங்களை செயற்படுத்தி முடிக்கவும்.
இக்கலந்துரையாடலில் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சஹான் பிரதீப், கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரள, ஜாஎல பிரதேச செயலாளர். ஆசிரி சந்தருவன் வீரசேகர போன்றோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
2023.02.15