‘சீதாவக்க ஒடிஸ்ஸி’ ரயில் சேவை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பொதுமுகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீதாவக்க பிரதேசத்தை ஒரு புதிய சுற்றுலாத் தளமாக விரிவுபடுத்தும் நோக்குடன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் புதிய சீதாவாக்கை ஒடிஸ்ஸி ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பிக்கும் ரயிலில் 205 பயணிகள்; பயணிக்க முடியும்.
இந்த ரயிலுக்கான ஆசன முன்பதிவுகளை நுகேகொட மற்றும் மாகும்புர போக்குவரத்து நிலையங்களில் மேற்கொள்ள முடியும். இங்கு முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டணம. முறையே 800.00 ரூபா, 500.00 ரூபா மற்றும் 350.00 ரூபா என்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மேல் மாகாணத்திற்கு ஈர்க்கச் செய்து, நாட்டின் ஏனைய சுற்றுலாப் பகுதிகளைப் போன்று சீதாவக்கை பிரதேசத்தையும் ஊக்குவித்து உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் இங்கு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவர் சுகத் ஹேவாபத்திரனவும் கலந்துகொண்டார்.