வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம்- அனுராதபுரம்- புதிய நகரம்- அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்
சூரனை அடக்கியருள் தந்தவனே கதிரேசா
சுற்றமெல்லாம் நலமடைய உடனிருந்து அருளிடைய்யா
வேதனைகள் களைந்தெம்மைக் காத்துவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருள்தருவாய்
அச்சம் அகற்றி அமைதி தரும் கதிரேசா
அஞ்சாத மனவுறுதி நாம் பெறவே அருளிடைய்யா
மகிழ்ச்சியைத் தந்தெம்மை வாழவைத்துவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருளிடுவாய்
வேலுருவாய் காட்சிதரும் வேலவனே கதிரேசா
வெற்றிகளை நாம்பெறவே விரைந்து வந்து அருளிடைய்யா
உடல் நலமும், உளநலமும் தந்தெம்மை வாழவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருளிடுவாய்
பார்வதியின் திருமகனாய் வந்துதித்த கதிரேசா
பாரினிலே நல்லமைதி காத்திடவே உடனிருந்து அருளிடைய்யா
பாவவழி தடுத்தெம்மை நல் வழியில் வாழவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருளிடுவாய்
எல்லாளன் ஆண்டபதி காட்சிதரும் கதிரேசா
எதிர்காலம் ஏற்றமுற விரைந்து வந்து அருளிடைய்யா
எல்லாமும் நீயாக இருந்தெம்மை வாழவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருளிடுவாய்
தமிழ் மொழியின் காவலனாய் வீற்றிருக்கும் கதிரேசா
தரணியிலே தமிழர் நிலை மேன்மையுற உடன் வந்து அருளிடைய்யா
திடமாக நாம் வாழ வழிவிட்டு வாழவிடு
அனுராதபுர நகர் கோயில் கொண்ட கதிரேசா அருளிடுவாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.