கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- வெருகல்- அருள்மிகு- சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில்
பெருமைமிகு தமிழ் மண்ணில் நின்றருளும் பெருமானே
வரும் நன்மை வந்தடைய துணையிருக்க வேண்டுமைய்யா
பெருமைமிகு நம்பழைமை நிலைத்துலகில் பரவிவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே
மகாவலிப் பெருநதியில் தீர்த்தமாடும் பெருமானே
பகலவன் போல் எம்குலத்தோர் ஒளி பெருக்க வேண்டுமைய்யா
தமிழ்க் குலத்தோர் நிலைத் தென்றும் தனித்துவத்தைப் பேணிவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே
ஆவணியில் விழாக்காணும் அற்புதனே பெருமானே
அவனியிலே மனித குலம் அமைதியுற துணையிருக்க வேண்டுமைய்யா
தெளிவான மனவுறுதி என்றும் நாம் பெற்றுவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே
கிழக்கிலங்கை கோயில் கொண்டு காவல் தரும் பெருமானே
கிட்டிவரும் துன்பங்களை அகற்றிவிட துணையிருக்க வேண்டுமைய்யா
எட்டுத் திக்கும் நன்மை பெற என்றும் நாம் பெற்றுவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே
தோகை மயில் மீதமர்ந்து காட்சி தரும் பெருமானே
தோல்வியில்லா வாழ்வு பெற துணையிருக்க வேண்டுமைய்யா
நேர்மையும், நிதானமும் தவறாது பெற்றுவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே
வள்ளி தெய்வானை அன்னையரை அருகு கொண்ட பெருமானே
வளமான வாழ்வு பெறத் துணையிருக்க வேண்டுமைய்யா
வேதனைகள் அண்டாத நன்னிலையைப் பெற்றுவிட
அருளளிப்பாய் வெருகலமர் சித்திர வேலாயுதப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.