வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – அராலி செட்டியார்மடம் அருள்மிகு மண்டையன் திடல் வீரகத்தி விநாயகர் திருக்கோயில்
பழம் பெருமை கொண்ட இடம் உறைகின்ற விநாயகரே
பண்பு நெறி பிறழாமல் வாழும் வரம் வேண்டுமப்பா
துன்பங்கள் தடுத்தெம்மைக் காத்தருள வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
வடஇலங்கைத் தமிழ் மண்ணில் உறைகின்ற விநாயகரே
வளம் கொண்ட வாழ்வினையே தந்தருள வேண்டுமப்பா
குறை கொண்ட வாழ்வை நாம் அடையாமல் காத்தருள வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
மருத நிலச் சூழலிலே உறைகின்ற விநாயகரே
மனமகிழ்வு குன்றாமல் வாழ வரம் வேண்டுமப்பா
தடுமாறும் மனநிலையைத் தடுத்தருள வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
வயல் வெளியில் தனித்திருந்து உறைகின்ற விநாயகரே
பயணங்கள் பயமின்றி அமைய காப்பளிக்க வேண்டுமப்பா
பிழையான சிந்தனைகள் உடைத்தெறிய வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
துன்பங்கள் துடைத்தெறிந்து துயர் போக்க வந்துறையும் விநாயகரே
துணிவு கொண்ட மனம் தந்து உறுதிதர வேண்டுமப்பா
துயரங்கள் நெருங்காமல் காத்தருள வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
எங்கும் எதிலும் உறைகின்ற விநாயகரே
என்றும் உடனிருந்து வளவாழ்வு தரவேண்டுமப்பா
ஏங்கிநிற்கும் அவலநிலை அண்டாமல் காத்தருள வேண்டும்
செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.