செய்திகள்

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு.!

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று இரவு ஏழு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் நியாகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, வளல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த பிரதேச செயலாளர் பிரிவும் மண்சரிவு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தில் நாகொட, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, தெஹம்பவிட்ட ஆகிய மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு, மண்திட்டு உடைந்து வீழ்தல், கற்கள் சரிதல், போன்ற அபாயம் காணப்படுவதனால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com