உலகம்செய்திகள்

“7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது”

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை அவர் ஆய்வு செய்து, அங்குள்ள கைதிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை தற்போது ஜனாதிபதி கையில் உள்ள நிலையில், அவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் சிலர் சட்டச் சிக்கலை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தமிழக அரசு எந்த சட்டச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். நீட் ஆய்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நீதிமன்றத்துக்கு எதிராக நீட் குழு அமைக்கப்படவில்லை என்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மக்களின் கருத்துக்களை பெறவே இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனின் பரோல் குறித்து அவரது தாயார் மனு அளித்தால் இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button