மத்திய மாகாணம்- கண்டிமாவட்டம்- கண்டிமாநகர், கட்டுக்கலை அருள்மிகு- செல்வவிநாயகர் திருக்கோயில்
கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே
கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடைய்யா
கட்டுக்கலை தனிலிருந்து திருவருளைத் தருபவனே
கந்தனுக்கு மூத்தவனே உன்கருணை வேண்டுமைய்யா
சக்தியம்மை திருமகனே சங்கரனின் மூத்தவனே
சங்கடங்கள் வரும் வேளை தடை செய்துவிட்டிடைய்யா
சண்முகனாம் உன்தம்பி வேல்கொண்டு வந்திருந்து
சக்தியற்ற மக்களுக்குத் துணையிருக்கச் செய்திடைய்யா
தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவனே
தறிகெட்டுத் திரிகின்ற மக்களை நீ திருத்திடைய்யா
தண்மதியைத் தலையின்மேல் கொண்டவனாம் உன்தந்தை
தரணிக்கு அன்னவனின் கருணையை நீ சேர்த்திடைய்யா
வரும் வினைகள் போக்கிவிடும் வல்ல விநாயகரே
வந்தவினை போக்கிடவே விரைந்து வந்திடைய்யா
வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்று வாழவுந்தன்
வல்ல அருளினையே அடைய அருளிடைய்யா
மத்திய மலையகத்தின் மத்தியிலே வந்துறையும் விநாயகரே
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்க உடனிரைய்யா
முயற்சியுடன் முன்னேறி வாழ்வில் உயர்வு பெற
வல்லமை யெமக்களித்து காப்பினைத் தந்திடைய்யா
மலைசூழ்ந்த திருவிடத்தில் மாசறுக்க அமர்ந்தவரே
மலைத்து நிற்கும் எங்களுக்கு வழித்துணையாயிருந்திடைய்யா
மன்னவனே, திருமகனே மங்களத்தின் உறைவிடமே
வளமளித்து அருளளித்து அரவணைப்பைத் தந்திடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.