நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.
நிகரென்று கொட்டு முரசே -இந்த
நீணிலம் வாழ்பவரெல்லாம். பாரதி
தோழர் லெனின் மதிவானம் அவர்களின் மறைவையொட்டிய இரங்கல் செய்தி,
மலையக இலக்கிய கலைப்பண்பாட்டு செல்நெறியில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தோழர் லெனின் மதிவானம் அவர்களாவார்.
என நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலை இலக்கிய உலகில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்த லெனின் மதிவானம் அவர்களின் மறைவுத் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
லெனின் மதிவானம் அவர்களின் இலக்கிய பிரவேசம் மலையக கலை இலக்கிய செல்நெறியில் மிகுந்த உத்வேகத்தை தந்தது. ஆசிரியராக,விரிவுரையாளராக, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக பரிணமித்து இத்துறையில் முக்கிய அங்கமானார். கல்வி நிலையில் தன்னை வளர்த்துக்கொண்டவர். வாசிப்பின் ஊடாக தன்னுள் விருத்தியை ஏற்படுத்திக்கொண்டு அத் துறையிலும் முன்மாதிரியை வெளிப்படுத்தியவர். கல்வித்துறை, வாசிப்பின் ஆர்வம் ஊடாக தமிழ் இலக்கியத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவர். திறனாய்வுத்துறையில் தன்னை ஈடுபடுத்தி அத் துறையில் உச்சம் தொட்டவர். “வாசிப்பின் ஊடாக உலகை அடையலாம்” என்பதற்கு உதாரண புருசராக திகழ்ந்தவர். இலக்கிய உலகு அவர் எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்ட போதே பேரிழப்பை சந்தித்தது. இன்று அவரின் மூச்சு நிறுத்தப்பட்டமை மலையகத்திற்கு பேரிழப்பை உணர்த்துகிறது.
தொன்னூறுகளின் பிற்பகுதியில் “சரிநிகர்” பத்திரிக்கையின் போட்டி ஒன்றின் ஊடாக மலையக இலக்கிய உலகில் அறிமுகமானார். இத்துறையில் அவரின் தூர நோக்கான தரிசனத்தால் மலையகம், தேசியம், சர்வதேசியம் என்ற பார்வையில் தன்னை வியாபித்துக்கொண்டார்.
மாக்சிய சித்தாந்தத்தின் ஊடாக படைப்புகளை அனுகி அப் படைப்புகள் தொடர்பான விமர்சனங்களை முன் வைப்பதில் நிகரற்றவராக திகழ்ந்தார். திறனாய்வு தொடர்பில் இவருடைய எழுத்துக்கள் இத்துறைசார் ஆர்வலர்களுக்கு முன்மாதிரியானது. மூன்று தலைமுறை இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே நேச நட்பை பேணுவதில் மிகச் சிறந்த அனுகுமுறையை பின்பற்றியவர். மூத்த எழுத்தாளர்களின் வழிகாட்டலை மதித்தலுடன், சமகால எழுத்தாளர்களுடன் நேசமிகு புரிதலுடன் புதியவர்களுக்கு வழிகாட்டும் பக்குவமும் இவரில் சிறந்தது.
குழு வாதங்கள் என்பது மலையக இலக்கிய செல்நெறியில் மிகுந்த அபந்தமாகிறது. இச் சூழலில் இவரின் அனுகுமுறைகள் திறந்த நோக்கம் கருதியதாக அமைந்தது. கருத்தியல் ரீதியில் வேறுபட்ட சித்தாந்தங்களை கொண்டிருந்த போதிலும் பரந்துப்பட்ட எண்ணத்தோடு எல்லோரிடமும் பழகிய விதம் இவரை இலக்கிய உலகு உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிரதேசம் கடந்துஇ மொழிகள் கடந்துஇ இனங்கள் கடந்துஇ நாடுகள் கடந்து ஓர் பொதுப்பிரஜையாக நிலைநிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் என்ற பொறுப்பில் அமர்ந்த போது மலையக இலக்கிய தடங்களை பாட நூல்களில் இணைத்த செயற்பாடு மிக முக்கியத்திற்குறியது. அவ்வாறே முக்கிய இலக்கிய வடிவங்களை தெரிவு செய்து பாடநூல்கள் ஊடாக மாணவர்களுக்கு அறியச் செய்தார். ஒடுக்கப்பட்ட மககளின் மேன்மை வேண்டிய எழுத்துக்களை வெளிப்படுத்தினார். மலையக இலக்கியத்தின் காத்திரத்தை நிறுவுவதில் நிகரற்ற ஒருவராக திகழ்ந்தார்.
மலையக இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே இன்று மூத்தவர்கள் எம்மை வழிப்படுத்துவதில்லை என்ற கோசம் இளையவர்களிடம் நிலவுகிறது. இளையவர்கள் எம்மை மதிப்பதில்லை என்ற வசைப்பாடல் மூத்தோர்களிடம் மேலோங்கிய வண்ணம் உள்ளது. இப் போக்குகளால் சமகாலத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர மறுக்கின்றோம். இந்நிலையானது மிகுந்த பிரயத்தனத்தோடு “மலையகம்” என வகவம் அமைத்ததில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்வோம்.
இவ்வாறான மனநிலைகளை கடந்து தூரதரிசனத்தோடு பயண்த்த தோழர் லெனின் மதிவானம் அவர்களின் அனுகுமுறைகள் முன்மாதிரியானது. இவரின் அனுகுமுறைகளை பின்பற்றுவதே மலையக கலைப்பண்பாட்டு அம்சங்களை சீராக இட்டுச் செல்வதற்கு வழிகோலும் என்பது திண்ணமாகும்;.
தன்னை வகவம் அமைத்துஇ தான் சார்ந்த சமூதத்தின் உணர்வை வெளிப்படுத்துவதிலும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்திய இவரின் முன்மாதிரி போற்றுதற்குறியதாகும். அட்டன, காசல்றீயில் ஊற்றெடுத்த லெனின் அவர்கள் பல ஓடங்களுக்கு வழி சமைத்தவர். தேசியம் கடந்து சர்வதேசிய பரப்பில் மலையக சமூகத்தின் முக்கிய அம்சங்களை காட்டிய அவரது ஆய்வுப் பணிகள் சிறப்பிற்குறியது.
“மலேசிய தமிழர்களின் சமகால வாழ்வியல் பரிமானங்கள் – சில அவதானிப்புகள்” “பேராசிரியர் கைலாசபதியின் சமூக மாற்றத்தின் இயற்காற்றல்” “ மலையகம், தேசியம், சர்வதேசியம்” “ஊற்றுக்களும் ஓடங்களும்” ஆகிய நூல்களை பிரசவித்துள்ளார். அவரின் உரைகளும், பத்தி எழுத்துக்களும் நூலாக்கப்பட வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளது.
பத்தி எழுத்துக்கள் ஊடாக இவரின் உலகியல் பார்வை விஞ்ஞான மயப்பட்டதை அறியலாம். மலையக இலக்கியம் தொடர்பில் மலையக இலக்கியத்தை ஒப்பியல் நோக்கோடு அனுகிய முறை தெளிவாகிறது. சூரிய காந்தி இதழில் முச்சந்தி ஊடாக மலையக இலக்கிய கலைப்பண்பாட்டு அமம்சங்களை உலகறியச் செய்த லாவகம் தனித்துவமாக விளங்குகிறது. இவரின் இரு தசாப்தகால பணிகள் தனித்துவ அடையாளமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பணிகள் ஈடுசெய்ய முடியாதது. பேரிழப்பை உணர்கிறோம். இவர் பிரிவால் துயறுரும் சகலரோடும் நாமும் பங்குக்கொள்கிறோம்.