விளையாட்டு

T20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா அணி.

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (14) இடம்பெற்ற ரி20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது தென்னாபிரிக்க அணி.

போட்டியில் நாணயச்சுழற்சியில் இன்றும் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் இன்றைய போட்டியிலும் ஆகக் கூடுதலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா 39 (33) ஓட்டங்களை பெற்றதோடு, சாமிக கருணாரத்ன 24 (19), தசுன் சானக்க 18 (26) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஜோர்ன் போர்டுயின் மற்றும் ககிசோ ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 121 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 14.4 ஓவர்களில் எவ்வித விக்கெட்டுகளையம் இழக்காது வெற்றி இலக்கை கடந்து 121 ஒட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் 59 (46) ஓட்டங்களையும், றீசா ஹெண்ரிக்ஸ் 56 (42) ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களால் எவ்வித விக்கெட்டுகளையும் பெற முடியாமல் போனது. ஒரேயொரு ஓவரை வீசிய தசுன் சானக்க 14 ஓட்டங்களை வழங்கியிருந்தார் என்பது விசேட அம்சமாகும்.

அந்த வகையில் இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 3 போட்டிகளையும் தன்வசப்படுத்திய தென்னாபிரிக்க அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என வெற்றி கொண்டு, ஒன்றரை வருடங்களின் பின் ஒரு நாள் தொடரையும் 8 வருடங்களின் பின் தென்னாபிரிக்காவுடனான தொடரையும் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரி20 தொடரின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் தெரிவானார்.

Related Articles

Back to top button
image download