செய்திகள்

(Video) நாட்டில் இன்றும் பல பகுதிகளில் தேடுதல் வேட்டை; ஆயுதங்கள் பல மீட்பு..

நாட்டின் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கண்டி – தெல்தோட்டை, பத்தாம் பள்ளி பிரதேசத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – கிறிஸ்தோஃபர் வீதி வடிகானிலிருந்து 93 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் வடிகானை சுத்தம் செய்யும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து வடிகானிலிருந்து ரவைகள் மீட்கப்பட்டன.

தெரனியகல நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையத்திலிருந்து இராணுவத்தின் சீருடையை ஒத்த 27 சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கட்டுகஸ்தோட்டை , நீர்கொழும்பு கம்பளை குருணாகல் வெலிமடை, இரத்மலானை, பத்தேகம, சிலாபம் ஆகிய பல இடங்களில் இன்றும் சோதனைகள் இடம்பெற்றன.

கட்டுகஸ்தோட்டை – மடவல வீதியின் கடிகாராம விகாரைக்கருகில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையில் இன்று காலை சொகுசு வாகனமொன்றை பரிசோதனைக்குட்படுத்திய போது, 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 2 காற்றழுத்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

வாகனத்தின் சாரதி மற்றும் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் அவற்றை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பின்புறத்தில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் இரண்டை பரிசோதனைக்குட்படுத்திய போது வெவ்வேறாக வைக்கப்பட்டிருந்த இரண்டு T 56 ரக துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டியில் கைதான சகோதரர்களின் மாமா என கருதப்படும் காலணி வர்த்தகரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி திரட்டியமை மற்றும் அவற்றை வெவ்வேறு விடயங்களுக்கு வழங்கியமை என்பனவற்றில் ஈடுபட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடமிருந்து கொடுக்கல் வாங்கல் குறிப்புகள் சிலவும், 25 பற்றுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இராணுவத்தின் ஆடையையொத்த ஆடையுடன் உள்ள இரண்டு நிழற்படங்களையும் அடையாள அட்டைகள் இரண்டையும் பயங்கரவாத தாக்குதல் காணொளிகள் அடங்கிய மடிக்கணினியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செய்தி மூலம் : News1st

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com