பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒருவர் “கட்டுகஸ்தோட்டை சுதுபுத்தா” என்றும் இவர் 70 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் மற்றையவர் “ பராவத்தே கெவுமா” என அழைக்கப்படுபவர் என்றும் இவர் 20 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்த மாதம் 16ஆம் திகதி மஹவெல பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் பல்ஸர் ரக மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ ஒன்றை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதுபுத்தா என்ற சந்தேகநபர் ஏழரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, மனைவியை கத்தியால் குத்திவிட்டு பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் பணத்தேவைக்காக மோட்டார் சைக்கிளை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டமை, போதைப் பொருள் விநியோகம், தங்காபரணங்கள் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்த சந்தேகநபர்களை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
