இந்துச் சமுத்திரத்தின் முத்தான இலங்கையின் கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், உலகின் முதல் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஆலய நிர்மாண பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில், இந்த ஆலயத்திற்கான மேற்படி 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை இன்றைய (11.04.2025) தினம் ஆலய வளாகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சிலை இந்தியா, தமிழ்நாடு பிள்ளையார்பட்டி வளாகத்தில் செதுக்கப்பட்டதாகும். பிள்ளையார்பட்டி ஆலயக் குகைவரதர் பிள்ளையார் சிலைக்கு நிகராகவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்டி–நுவரெலியா பிரதான பாதையில் அமைக்கப்படவுள்ள இந்த ஸ்ரீ மகா கணபதி ஆலயம், இலங்கை மக்களையும், உலக மக்களையும், உல்லாச பயணிகளையும் கவரக்கூடிய வகையில் கட்டமைக்கப்படுகிறது.
கடந்த வருடம், வழிபாட்டுக்கான பிள்ளையாருக்கான சன்னிதானம் எழுப்பப்பட்டு, அதற்கான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இந்த ஆலயம் அமைக்கப்படவுள்ள இடம் மிகவும் புனிதமானதாகும். வரலாற்று ரீதியாக இவை முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இலங்கை இராமாயண வரலாற்றில் மத்திய மலைநாட்டில் உள்ள அசோகவனம் முக்கிய பங்காற்றுகிறது.
இராமாயண யுக காலத்தில் இருந்ததாக கருதப்படும் இந்த அசோகவனம், தற்போது அபிவிருத்தி காரணமாக நகரமாகவும் பெருந்தோட்டதுறையையும் சார்ந்த பகுதியாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், அசோகவனம் ஆரம்பமான இடத்தில் பிள்ளையாரின் சிலை நிறுவப்பட்டு, அசோகவன வரலாற்றுக்கு பிள்ளையார் சான்றாக அமைந்து, அந்த வரலாற்றை சிறப்பிக்கும் விதமாக இந்த ஆலயம் உருவாக்கப்படுகிறது.
தொடர்ந்து, இலங்கையின் இராமாயண வரலாற்றில் இந்த ஆலயத்திற்குப் பின், இறாம்பொடை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், அதனைத் தொடர்ந்து இறாம்பொடை நகரம், நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம் போன்ற முக்கியமான தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இவை அனைத்தும் இராமாயண வரலாற்று சிறப்புமிக்க இடங்களாகும். இந்த வரலாற்றை முன்வைத்து ஆரம்பிக்கப்படும் ஆலயத்தின் 16 அடி உயர சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவும், அதைத் தொடர்ந்து சிலை பிரதிஷ்டையும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மீக பணிகளை புஸ்ஸல்லாவ பிரதேசத்தின் ஆன்மீக மற்றும் சமூக அமைப்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் இலங்கை வந்த பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இலங்கையில் சீதை ஆலயம் அமைப்பதற்கான வேலைத் திட்டங்களை அறிவித்ததன் மூலம், இலங்கை–இந்திய இராமாயண வரலாற்றை மேலும் மெருகூட்டியுள்ளார்.
இந்தச் செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பெருந்தோட்ட மக்களாக நாங்களும் நன்றி கூறுகிறோம்.
இந்த உன்னத ஆன்மீக கட்டுமான பணிகளில் உலகத் தமிழர் மற்றும் இந்து மக்கள் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

