மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மாலனி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கை சினிமாவின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக கலைத்துறையில் உள்ள அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேவேளை மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்த கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
