லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாடசாலை கட்டிடம் கையளிப்பு
மஸ்கெலியாவில் அமைந்துள்ள லக்கம் ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களின் பத்து ஆண்டுகால கனவு இன்று நனவானது. அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) பூரண நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கபட்ட புதிய பாடசாலை கட்டடம் நேற்று (28.10.2025) பாடசாலை சமூகத்தின் பாவனைக்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இப்பாடசாலை 2014ஆம் ஆண்டு 1000 பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, இதுவரை அயல் பாடசாலையின் தற்காலிக கட்டிடங்களில் எந்த வித அடிப்படை வசதிகளுமின்றி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதிபர் திருமதி எஸ். விஜயகாந்தி மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, IMHO நிறுவனம் மூன்று வகுப்பறைகள் கொண்ட நிரந்தரக் கட்டடத்தை சுமார் ரூ. 90 லட்சம் செலவில் மிக நேர்த்தியாக நிறைவு செய்து கையளித்துள்ளது.
இந்நிகழ்வில், அமெரிக்காவின் கலிபோர்னியா ஸ்டெம்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் செயலாளருமாகிய வைத்தியர் யாசோ நட்குணம் அவர்களும், மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி மதுபாணி பியாசேனா அவர்களும், IMHO அமைப்பின் செயற்றிட்ட பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரன், ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் திரு. டி.எம்.என்.சி. நாமல் குமார அவர்களோடு இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக பெருந்தோட்ட கல்விக்கான இணைப்பாளர், IMHO நிறுவன உறுப்பினர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர் திருமதி ஜயாநதினி உள்ளிட்ட பல கல்வி அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தில் வருடத்திற்கு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் நவீன கற்றல் சூழலை அனுபவிக்கவுள்ளதுடன், புதிய கல்வி சீர்திருத்த இலக்குகளை அடையும் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
செய்தி: கு. ராஜசேகரன் – மஸ்கெலியா



