கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்றைய தினம் (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்
வழக்கு விசாரணையின் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தொலைக் காணொளித் தொழினுட்பம் (Zoom) ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இருதரப்பு வாதங்களையும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அறிக்கைகளையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை
2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் B-அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களிலும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 3 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
