கொழும்பு மருதானை பகுதியில் வைத்தியரின் பரிந்துரையின்றி சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தகம் ஒன்றை, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), மருதானைப் பொலிஸார் மற்றும் அத தெரண ‘உகுஸ்ஸா’ புலனாய்வுக் குழுவினர் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர்.
நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், தகுதியற்ற நபர் ஒருவரால் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு மருத்துவப் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யத் தடைசெய்யப்பட்ட, மருத்துவ விநியோகப் பிரிவினால் (MSD) அரச வைத்தியசாலைகளுக்கு மட்டும் வழங்கப்படும் 8 வகையான மருந்துகள் இங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச வைத்தியசாலைகளுக்குரிய மருந்துகள் இந்தத் தனியார் மருந்தகத்திற்குக் கிடைத்த வழிமுறை குறித்து சுகாதார அமைச்சு துரித விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைவாக, பிரதம உணவு மற்றும் ஒளடதப் பரிசோதகர் நெவில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டனர்.
