பெருந்தோட்ட மக்கள் மற்றும் சாதாரண பாமர மக்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளமை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினால் நசுங்கிப் போயிருக்கும் எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளதாக மஸ்கெலியா நிருபர் தெரிவிக்கின்றார்.
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாதாரண மக்கள் அன்றாடம் பசியாறும் ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளன.
வெறும் ஐந்து ரூபாய்தானே என்று ஆட்சியாளர்கள் இதை அலட்சியமாகக் கருதினாலும், நாளாந்த கூலி வேலை செய்து சிறு உணவகங்களில் சாப்பிடும் ஏழை எளிய மக்களின் கழுத்தை நெரிக்கும் கொடிய பேரிடியாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.
மக்களுக்குப் பெரிய விடிவைத் தருவோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த கால ஆட்சியாளர்களைக் குறை கூறிக்கொண்டோ அல்லது ‘கஜானா காலியாக உள்ளது’ என்ற காரணங்களைக் கூறிக்கொண்டோ காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, பசியோடு வாடும் மக்களின் வயிறாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் தற்போதைய ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.
