கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.
கண்டி – மடுல்கலை உணனகலை முத்துமாரியம்மன் ஆலயம், டியனில்ல முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை கம்பளிக்கடை முத்துமாரியம்மன் ஆலயம், ஹுலுகங்கை விநாயகர் ஆலயம், ஆகலை அம்மன் ஆலயம், கந்தக்கட்டி அம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த ஆலயங்களின் நிர்வாகங்களால் பொலிஸ் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்,
கருவறை விக்கிரகத்திற்கும், ஏனைய விக்கிரகங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களும், உண்டியலும் திருடப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயங்களுக்குள் இதுவரை எவரும் பிரவேசித்து முழுமையாக பார்வையிடாதமையால், வேறு சிலைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
பொலிஸ் விசாரணைகளின் பின்னரே, துல்லியமான தகவலை அறியமுடியும்.
குறித்த ஆலயங்களின் வளாகங்களில் ஆலய பரிபாலன சபையினரும், பொது பொதுமக்களும் கூடியிருக்கின்றனர்.
திட்டமிட்ட குழுவினரின் இந்த மோசமான செயலுக்கு பொதுமக்கள், தங்களது கடும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி பன்வில
2026/9/7
