(முஹம்மட் றசீன்)
கடந்த 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 9 வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் கடமை புரியும் ஊழியர்களே நேற்று (28) திருகோணமலையில் வைத்து இவ்வாறு மகஜர் ஒன்றினை கையளித்து இருந்தனர்.
நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 2019 ம் ஆண்டு 180 நாள் கடமை புரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு சுற்று நிருபம் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரை அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை பெற்று வெறுமனே இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களுக்கான நிரந்தர நியமனம் தற்போது கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றது.
கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக குறைந்த ஊதியத்துடன் சுகாதார ஊழியர்களாக கடமை புரியும் இவ் ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடம் எழுத்து மூலமான மகஜர் ஒன்றினை வழங்கியிருந்தார்கள்.
குறித்த ஊழியர்களிடம் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் என்னால் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பாக நான் ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை விரைவில் அனுப்புவதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிவித்தார்
உள்ளூராட்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்பர அவர்களினால் கடந்த மாதம் சமூக ஊடகங்கள் வாயிலாக உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் கடமை புரிந்து வருகின்றார்கள் அவர்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியவுடன் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



