உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வைபவம் நாளை (02) காலை 9.00 மணிக்கு பத்தரமுல்ல, செத்சிறிபாய (இரண்டாம் கட்டம்) 11வது மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
1986 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாக (World Habitat Day) அறிவிக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு தீவான ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரிலே ஒன்று கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்புக்கள் ஆணைக்குழு, அதன் வருடாந்த அமர்வில் ஆண்டுதோறும் உலக குடியிருப்பு தினமாக அறிமுகப்படுத்தியது.
அந்த நேரத்தில் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இலங்கைப் பிரதிநிதிக் குழுவிற்குத் தலைமை தாங்கி, உலக குடியிருப்பு தினம் பற்றிய யோசனையை முதன்முறையாக உலக மனிதக் குடியிருப்பு அமைப்பிடம் முன்வைத்தார். சர்வதேச வீடமைப்பு வாரம் மூலம், உலகின் சகல மனிதக் குழுமங்களின் அவதானத்தை வீடமைப்பு மற்றும் குடியிருப்பின் மீது செலுத்தப்பட்டது.
அதன்படி இவ்வருட உலக குடியிருப்பு தினம் நாளை (02) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 37 ஆண்டுகளில், வீடுகள் மற்றும் குடியிருப்புகள் தொடர்பான பல்வேறு கருப்பொருள்களின் கீழ் உலக வாழ்விட தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உலக குடியிருப்பு தினம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருள் “ஒரு பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்” ஆகும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு ஐக்கிய நாடுகளின் மனித குடியிருப்பு திட்டத்தின் (UN-Habitat) பிரதிநிதி அமைப்பாகும், இது உலக குடியிருப்பு தினத்தை உலகம் முழுவதும் செயல்படுத்துகிறது.
அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குடியிருப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வாரத்தில் 500 பயனாளிகளுக்கு வீட்டுறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் வீட்டுறுதிப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த ஒரு வருடத்திற்குள் முடிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பாடசாலை மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சித்திரக் கண்காட்சி மற்றும் நடனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், குறும்பட விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பிரதமர் நாளை சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகளை வழங்கி வைப்பார்.
இது தவிர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர்ப்புற குடியிருப்புகளை வீட்டு பொருளாதார அலகுகளாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தும்.
முனீரா அபூபக்கர்