தற்காலத்தில் உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக 2030ஆம் ஆண்டளவில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டி, வேன், பஸ் மாத்திரமன்றி புகையிரதம் மற்றும் சகல பொதுப் போக்குவரத்து வாகனங்களும் எரிபொருளின்றி மின்சாரப் பயன்பாட்டினால் இயங்குபவைகளாக காணப்பட வேண்டும் என்பதற்கு உலக நாடுகளில் மாநாடுகள், கலந்துரையாடல்கள், மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான மாநாட்டின் போது மின்சார வாகனங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இம்மாதம் ஒக்டோபர்14,15ஆம் திகதிகளில் ஹோமாகம பிடிபன பசுமைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசாங்க நிறுவனங்களின் அமைப்பு மற்றும் தனியார் துறையினர் இணைந்து குறைந்த செலவில், சூழல் பாதுகாப்பு மிக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை இலங்கையில் பிரபல்யப்படுத்துவதற்காகவும் பரவலாக்குவதற்காகவும் இலகுவான வசதிகளை வழங்கும் முறைமையை நுகர்வோர் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.