இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உதவுவது அரசியலை விட நாட்டைப் பற்றிய சிந்தனையே என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடு வழமைக்குத் திரும்பியுள்ள இந்த தருணத்தில் ஜனாதிபதியின் காலை வாரிவிடும் சிலரின் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு அடுத்த வருடம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுமார் ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டு மரந்தகஹமுலவில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அரிசி மொத்த விற்பனை நிலையத்தை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.
இந்நாட்டில்; தனியாரின் நெல் ஏகபோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் இந்தக் களஞ்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது 2014ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திவினெகும திட்டத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட்டது.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த அரிசி களங்சியசாலை வளாகம் 2015 இல் இல்லாதொழிக்கப்பட்டது. அதே நேரத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த களங்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக மையம் காடு போல் வளர்ந்து காணப்பட்டது.
அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சியசாலை வளாகம் புனரமைக்கப்பட்டது. மரந்தகஹமுல களஞ்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தார்.
மரந்தகஹமுல களஞ்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணி சுமார் இரண்டு ஏக்கர் அளவில் இருக்க வேண்டும். 115 விற்பனை நிலையங்களைக்; கொண்ட இதனை நிர்மாணிப்பதற்கு 459 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இங்கு கட்டுமானப் பணிகள் முழுவதையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மெற்கொண்டுள்ளது. இந்தக் களஞ்சியசாலை வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளன.
அரிசி களஞ்சியசாலை வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது:
இந்த அரிசி களஞ்சியசாலை வளாகம் பசில் ராஜபக்ஷவின் காலத்தில் கட்டப்பட்டது. அது நாட்டின் அரிசி ஏகபோகத்தை உடைக்கும் வகையில் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையைக் கொண்டிருந்தது. இன்று இந்நாட்டில் அரிசி வியாபாரம் ஒரு சில வர்த்தகர்களின் கைகளில் உள்ளது. அந்தத் வர்த்தகர்கள் தங்கள் விருப்பப்படி அரசை ஆட்டிப்படைத்து கையாளுகிறார்கள்.
அரசாங்கம் என்ற வகையில், நுகர்வோர் மற்றும் விவசாயத்தை நாம் பார்க்க வேண்டும். ஆனால் வணிகர்களுக்கு அப்படி இல்லை. அதனால்தான் மேற்கூறிய வர்த்தகர்கள்; கொள்ளையடித்து நெல்லை வாங்குகிறார்கள். அதை எடுத்து ஆண்டுக்கணக்கில் சேமித்து வைத்து, அரிசி தட்டுப்பாடு காலத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்கின்றனர். அதனால், சமீப காலமாக, சிறு நெல் விவசாயிகள் இயற்கையாகவே அழிந்து வருகின்றனர். அவர்கள் அந்த விவசாய நடவடிக்கைகளை அறவே கைவிட்டு போனார்கள். அப்போது மரந்தகஹமுல அரிசி வியாபாரிகள் அரிசி ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர தம்மை பலப்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் ஏற்கனவே உள்ள அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இன்று திறந்து வைக்கப்பட்ட மரந்தகஹமுல அரிசி களஞ்சியசாலை வளாகம் பொருளாதார மையமாக மாறவுள்ளது. லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் ரெஜி ரணதுங்க ஆகியோரின் காலத்தில் தான் நெதகமுவ பிரதேசத்தில் உள்ள முந்திரி வியாபாரிகளுக்கும், மரந்தகஹமுலவில் உள்ள அரிசி வியாபாரிகளுக்கும் தனியான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிவு கூறப்பட்டது. அந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்படும் போது, இந்த அம்சங்கள் மேம்படும். இந்த இடத்தில் நெல் களஞ்சியசாலை உள்ளது. அந்த களஞ்சியசாலைகளில் உள்ள அரிசியை கம்பஹா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதற்கான வழியை நான் ஆளுநருடன் கலந்துரையாடினேன். அதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முறையும் உருவாக்கப்படுகிறது. மாகாண சபை ஒதுக்கீட்டில் இருந்து கம்பஹா வங்கி சங்கத்திற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு ஆளுநரிடம் கூறினேன். நான் மாகாண முதலமைச்சராக இருந்த போது கம்பஹா வங்கி சங்கத்திற்கு அவ்வாறான பணத்தை வழங்கினேன். சிறு வர்த்தகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இதைத் தொடங்கினோம். அதிக பருவத்தில் நெல்லை பெற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என நம்புகிறோம்.
நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் காலம் இது. இதற்கு முன்பும், நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, கிராமப்புற வாழ்க்கையை வலுப்படுத்த மக்களுக்கு கோழிகள் வழங்கப்பட்டன. அதனால், குறைந்த விலையில் இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்க முடிந்தது. ஒரு காலத்தில் கோழி இறைச்சி 200-300 ரூபாய்க்கும், முட்டை 15-20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வர்த்தகர்களால்; நிர்வகிக்கப்படுகின்றது. அதிகளவில் கோழிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கினால், மக்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூரணப்படுத்த முடியும். இந்த பொருளாதார நெருக்கடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக சிலர் கதையளக்கின்றனர். இல்லை. இது குறுகிய கால நெருக்கடி அல்ல. வரி குறைக்கப்பட்டாலும் அல்லது அதிகரித்தாலும் விமர்சனம் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகள் பிரபலமான முடிவுகள் அல்ல.
கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு இதுவரை யாரும் எதிர்கொள்ளாத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொரோனா காலத்தில், மக்களை காப்பாற்றுவதா அல்லது பொருளாதாரத்தை காப்பாற்றுவதா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டியிருந்தது. பொருளாதாரத்தை பின்னர் காப்பாற்ற முடியும் என்பதால் நாட்டை மூட முடிவு செய்தோம், எனவே மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். நாடு மூடப்பட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது எங்களுக்குத் தெரியும். மூன்று தடுப்பூசிகளையும் நாட்டு மக்களுக்கு வழங்கி நாட்டை திறக்க முற்பட்ட போது, தொழிற்சங்கங்கள் அதனை எதிர்த்தன. அப்போது நாம் எடுத்த முடிவுகள் கொள்கையளவில் நல்லதாக இருந்தாலும், அவை தவறான முடிவுகளாக இருக்கலாம். அன்னிய கையிருப்பு இல்லாமல் எரிவாயு, மருந்து, எரிபொருள் இல்லாமல் தவிக்கும் போது சொந்தக்காரர்கள் சிலர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதை நிறுத்துங்கள் என்றார்கள். ஆனால் அந்த நெருக்கடிகளை ஓராண்டுக்குள் சமாளித்துவிட்டோம். நாடு ஸ்திரமாகிக்கொண்டிருக்கும் போது, நாட்டை மீண்டும் சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். மிகவும் நன்றாக வாழ முடியாது. எங்கள் வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன? போராட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. போதைப்பொருள் வியாபாரிகள் போராட்டம் நடத்திய போது என்ன செய்தார்கள்? நாட்டுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டாலும் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறவில்லை. எனக்கு உடுகம்பளையில் தங்குவதற்கு இன்னும் இடமில்லை. ஆனால் நாங்கள் முன்பை விட வலுவாக கிராமத்திற்கு செல்கிறோம். எமக்கு எதிராகக் கூச்சலிடும் மக்கள் இன்று கிராமத்திற்கு என்ன செய்தார்கள்? நாங்கள் கட்சி மாநாடு நடத்தும்போது, மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் நாங்கள் வலிமையானவர்கள். போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியில், நாட்டைப் பொறுப்பேற்கும் தலைவர் இல்லை. சஜித் பிரேமதாசவையும் சரத் பொன்சேகாவையும் அன்று அழைத்தோம். ஆனால் யாரும் வரவில்லை. அன்று ரணில் விக்கிரமசிங்க மட்டும் முன் வந்தார். இப்போது இது பற்றி பேசும் போது நான் ரணிலின் பின்னால் செல்கிறேன் என்று சிலர் காட்ட முயற்சிக்கின்றனர். நான் அப்படி இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்கள் என்னைப் போல் வேறு யாரும் இல்லை. ஆனால் நான் நல்ல விஷயங்களுக்கு உதவுகிறேன். ஒரு வருடம் முன்பு நாடு எப்படி இருந்தது என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் உதவுகிறோம். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, சிலர் அதைத் திரும்பப் பெற முயற்சிப்பார்கள். அதை அனுமதிக்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகம். இது எங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே, அடுத்த ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம் என்றார்.
இந்த நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, திவுலபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக ஜயசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
