முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (01) மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துமிந்த சில்வாவை சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (01) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி வெளிநாட்டுக்கு செல்வதற்கான இடைக்கால தடையையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அத்துடன் உச்ச நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி, வரலாற்று சிறப்புமிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.