இன்று ஹொப்டன் பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துநர் சாரதி
அரச பேருந்தின் நடத்துநர் சாரதி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை பிபிலை இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து தம்பிடியவிலிருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளையில் லுணுகலையில் இருந்து பசறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்துடன் நேரம் தொடர்பான வாக்குவாதம் முற்றி ஹொப்டன் பகுதியில் வைத்து கைகலப்பாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அரச பேருந்தின் நடத்துநர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஒரு நபரும் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப பிரியந்த சந்திரசேகர தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
