சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் வேதனம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே தான், வேதன உயர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. போராட்டம் செய்தவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் செய்து கொச்சைப்படுத்தாமல் அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என்பது உண்மைதான். அதேநேரம், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத காரணத்தால் தான் அவர்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையில் தான் ஆசிரியர்கள் ஆகக் குறைந்தளவு சம்பளத்தைப் பெற்று வருகின்றார்கள். அதேநேரம் அவர்களின் நிறைவான சேவையின் ஊடாகத்தான் வருடந்தோறும் சிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக் கழக அனுமதி அதிகரித்து வருவதோடு பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. மேலும், வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அந்நியச் செலாவணியும் பெருமளவில் கிடைத்து வருகின்றது. அனைத்துக்கும் அடித்தளம் இடுகின்றவர்கள் ஆசிரியர்களே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அத்தோடு நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் அல்லது பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அரசாங்கம் இதில் கவனம் செலுத்தத் தவறுவதால் தான் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த நிலையில் போராட்டம் செய்பவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் செய்வது ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் செயலாகும். ஆசிரிய சமூகம் தலைகுனிய நேரும் போது 40 இலட்சம் மாணவர்களும் 10 ஆயிரம் பாடசாலைகளும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகின்றது. காலத்துக்குக் காலம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் உதாசீனம் செய்யப்படுவதால் தான் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன, எனவே, அரசாங்கம் உண்மைத் தன்மையை உணர்ந்து உரிய தீர்வை வழங்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.