எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான உத்தரவு அடுத்த சில தினங்களில் அரச அச்சகத்துக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தேர்தலுக்காக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த முறையை விட தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கமைய வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலம் வரை அதிகரித்துள்ளதுடன் ஒரே பக்கத்தில் வாக்குச்சீட்டை அச்சிட முடியும். எனவே, வாக்குச்சீட்டுக்கான செலவு மதிப்பிடப்பட்ட செலவினத்தை விடவும் அதிகரிக்கும்.
எனினும் மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டிற்குள் குறித்த அச்சிடல் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
