கல்வி அனைவருக்குமான அடிப்படை மனித உரிமை ஆகும். அவ்வாறாயின் ஏன் எம்மில் சிலருக்கு அவ்வுரிமை முழுமையாக இல்லை? எம்மை சூழ்ந்திருக்கும் இந்த அவலமான ஏழ்மை நிலைக்கு எமக்கு மறுக்கப்பட்ட கல்வி உரிமையா காரணம்? இந்நிலையை மாற்றுவதற்கு வழியே இல்லையா? இக்கல்வியை பெறுவதற்கு நாம் அதிகார வர்க்கத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டுமா? இக்கட்டுரையை வாசித்து முடிக்கும் போது உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வருமாயின், என் சொந்த வாழ்க்கையை உங்கள் முன் வைத்ததில் பயன் இருக்கும் என எண்ணுகிறேன். இக்கட்டுரை எல்லா மலையக மாணவர்களையும், சமூகத்தையும் மையப்படுத்தியே எழுதியுள்ளேன்.
எமக்கு உண்மையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளதா? இக்கேள்விக்கு விடையாக நம்மில் சிலர் ஆம் என்போம், வேறு சிலர் இல்லை என்போம். நாமே ஒரு தெளிவற்ற நிலையில் உள்ளோம். உண்மை எதுவெனில், பொதுவாக பார்க்கும் போது அனைவருக்கும் இலவசக் கல்வி என இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டாலும் அனைவருக்கும் சமத்துவமான, தரமான கல்வி கிடைப்பதில்லை. நகர்புற, கிராமத்துபுற, தோட்டப்புற பாடசாலைகள் என உத்தியோக பற்றற்ற பிரிவு காணப்படுகின்றது. இப் பாடசாலைகளில் காணப்படும் கற்பித்தலுக்கும், கற்றலுக்குமான வசதி வாய்ப்புகளில் ஒப்பிட முடியாத ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. பணம் படைத்தோருக்கும், அதிகார வர்க்கத்தாருக்கும் சேவையாற்றும் நகர்ப்புற பாடசாலைகள் சகல வித வசதி வாய்ப்புகளுடன், அரசு மற்றும் தனியார் துறையினரால் போசிக்கப்பட்டு வருகிறது. இதே வேலை கிராமபுற மற்றும் தோட்டப்புற பாடசாலைகள் அடிப்படை கல்வியை கூட வழங்குவதற்கான வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பக் கல்வியை கற்கும் ஒரு நகர்புற மாணவனும் ஒரு தோட்டப்புற மாணவனும் இரு வேறு உலகில் வாழ்கின்றனர். இவர்களின் எதிர்கால வாழ்க்கை இங்கேயே தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு எனக்குத் தெரிந்திருந்தாலும் அண்மையில் ஏற்பட்ட கோவிட் தொற்றுக் காலத்தில் பிரபல்யம் அடைந்த தொலைநிலை கற்றல் செயற்பாடுகள் கிராம மற்றும் மிக முக்கியமாக தோட்டப்புற மாணவர்களுக்கு முற்றுமுழுதாக கிடைக்கவில்லை. இதுவரை காலமும் மறைமுகமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமை வெளிப்படையாக மறுக்கப்பட்ட தருணம் அதுவாகும். பொதுநலம் கருதும் எவரையும் இந்நிலைமை சிந்திக்கத் தூண்டி இருக்க வேண்டும். ஆனால் இந்த அநீதியான செயற்பாட்டுக்கு எதிராக பெரிதாக எவரும் குரல் கொடுக்கவில்லை என எண்ணுகிறேன். நகர்ப்புற, தோட்டப்புற மாணவர்களின் நிலைமையை முன்கொணர்ந்து நான் ஒரு வர்க்கவாதத்தை தூண்டுவதாக எண்ண வேண்டாம். ஒரு மாணவனின் வாய்ப்பை இல்லாமல் செய்து இன்னொரு மாணவனுக்கு வாய்ப்பை வழங்கும் எண்ணம் அல்ல இது. எமது நாட்டில் நிலவும் சமத்துவமற்ற கல்வியின் உண்மை நிலையை எம்மிடையே விவாதித்து, அனைவருக்கும் சமத்துவமான கல்வி வாய்ப்பை பெறுவதற்கான முயற்சியை ஊக்குவிப்பதே நோக்கமாகும். மற்றும் கீழே விபரித்துள்ள எனது சொந்த வாழ்க்கை பாதையை பார்க்கும் போது தோட்ட மற்றும் நகர்ப்புற அனுபவம் உள்ள எனக்கு இக்கட்டுரையை எழுதுவதற்கு தகமை உள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.
இக்கட்டுரைக்கு வலு சேர்ப்பதற்கே எனது சொந்த கல்விப் பாதையை இங்கு உள்ளடக்கியுள்ளேன். நான் தற்போது அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் உயிரியல் இரசாயன (Biochemistry) துறையில் பேராசிரியராக கற்பித்தலிலும், ஆராய்சியிலும் ஈடுபட்டுள்ளேன். அமெரிக்க சமூகத்தில் ‘அமெரிக்க கனவு’ (American Dream) எனும் ஒரு கருத்து உள்ளது. இக்கருத்தானது ‘ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியில் வெற்றியடையவும், சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரமும் வாய்ப்பும் உள்ளது’ என்பதாகும். இக்கனவை அடைவதற்கான பல்வேறுபட்ட வழிமுறைகள் அமெரிக்க நாட்டில் உள்ளது. நான் கல்வி சார்ந்த வழியின் மூலமாக எனது அமெரிக்க கனவை நனவாக்கியுள்ளேன். இலங்கை மற்றும் அமெரிக்காவில் நான் பெற்ற கல்வி மாத்திரமே இதற்கு வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது. கல்வியால் நான் எனது வறுமை நிலையிலிருந்து விடுபட்டுள்ளேன். என்னை விட மிகவும் வறுமையான நிலையில் இருந்து கல்வியினால் முன்னேறிய பலரையும் எனக்குத் தெரியும். தனி ஒரு மாணவருக்கு ஆர்வமும், விடாமுயற்சி நிச்சயம் இருப்பின் இந்நிலையை அடைவது மிகவும் சாத்தியம். ஆனால் ஒரு மாணவனுக்கு ஆர்வமும், விடாமுயற்சியும் மட்டும் மட்டும் போதாது என்பதை தொடர்ந்து வாசித்தால் உணர்வீர்கள்.
நான் எனது சாதாரண தரம் வரையிலான கல்வியை கலஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் (தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) கற்றேன். ஆரம்ப தரங்களில் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவனாகவே இருந்தேன். தந்தை இல்லாமல் வறுமை நிலையில் வளர்ந்த நான் பல நாட்கள் பாடசாலை செல்ல மாட்டேன் என்று அம்மாவுடன் முரண்பட்டது இன்றும் ஞாபகத்துக்கு வருகின்றது. எனது தாயார் எழுத வாசிக்க தெரியாத கல்வி அறிவற்றவர். ஆனால் அவர் என் மீது காட்டிய அதீத அன்புகும், அரவணைப்புக்கும் ஈடு இணை கிடையாது. அவர் எனது கல்வியில் கவனம் செலுத்தி இருக்காவிட்டால் நான் இன்று இந்த நிலைமையில் இருக்க மாட்டேன். எனவே கற்பதற்கு வாய்ப்பு இருந்திராத பெற்றோரும், தமது குழந்தையின் கல்வியில் ஆர்வம் காட்டுவதற்கு இக்கட்டுரையை வாசிப்போர் உதவி உற்சாகப்படுத்த வேண்டும். ஆறாம் அல்லது ஏழாம் தரத்துக்கு பின்னர் எனது கல்வி செயற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. சடுதியாக நான் சகல பாடங்களிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். எனக்கு கற்றலில் ஏற்பட்ட ஆர்வம் எதற்கும் கட்டுப்படவில்லை. இதற்கு எனது வறுமை நிலைமையும் ஒரு காரணமாய் அமைந்திருந்தது, ஏனெனில் கல்வியைத் தவிர வேறு எந்த வழியும் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்கள் முடிந்த வரையில் கல்வியில் ஆர்வம் காட்ட முனைய வேண்டும். நீங்கள் தற்போது கல்வியில் பின்தங்கி இருந்தாலும் ஒரு நாள் என்னைப் போன்று அத்தடையை உடைத்தெறிவீர்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமுதாயமும் ஒன்றுபட்டு தொடர்ச்சியாக இம்முயற்சியில் ஈடுபட்டு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். சொல்வது இலகு செய்வது யார் என்ற அலட்சிய மனப்பான்மையோடு இருப்போமாயின் எம் சமுதாயத்தின் விடிவுக்கு வழியில்லை. கல்வியற்ற நிலைமையால் உருவான எமது சமூகத்தின் பொருளாதார தாழ்வை மாற்றி உயர்நிலை அடைய கல்வி ஒரு நிரூபிக்கப்பட்ட முறை என நான் கருதுகிறேன். நீங்கள் இதை நம்புகிறீர்களா? தொடர்ந்து வாசித்தால், கல்வி எவ்வாறு என்னை இன்றிருக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது என்று நீங்கள் அறிவீர்கள்.
எனது கிராமப்புற பாடசாலையில் ஆரம்பம் முதலே மிகவும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் பலர் இருந்தனர். காலையிலிருந்து பிற்பகல் வரை பாடங்கள் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. பத்தாம் தரத்தில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்களால் இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் மேலதிக வகுப்புகள் நடைபெற்றன. இருப்பினும் கட்டணம் செலுத்தும் மேலதிக வகுப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தது. அதற்கான தேவையும் குறைவாகவே இருந்தது. பாடசாலையில் ஆசிரியர்கள் பாடவிதானத்தை முழுமையாக கற்பித்தனர். தற்போது, நான் அறிந்தவரையில், கட்டணம் செலுத்தும் வகுப்புகளுக்கு (Tuition) முன்னுரிமை வழங்கி பாடசாலை சார்ந்த கற்பித்தல் பின்தங்கியுள்ளது. அன்றைய பாடசாலை சார்ந்த கல்வி இன்றிருக்கும் நிலையில் இருந்திருப்பின், தரமான ஒருவேளை உணவிற்கு சிரமப்பட்ட நான் இன்று இந்த நிலையில் இருக்க மாட்டேன். அன்று தரமான பாடசாலை சார்ந்த பாட விதானமும் அதனைக் கற்றுத்தர இருந்த அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களாலும், எனக்கு உயர்தரமான இலவச கல்வி கிடைத்தது. என்னை போன்ற எத்தனை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இன்று மறுக்கப்பட்டுள்ளது? இன்று நம்மிடையே காணப்படும் நகர்ப்புற தனியார் வகுப்புகளை சார்ந்த கல்வி கிராமப்புற, தோட்டப்புற மாணவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்புடையதா? எம்மிடையே வறுமையில் உழலும் பல்லாயிரக்கணக்கான தோட்டப்புற மலையக மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கான கல்வி மறுக்கப்படுமாயின் எமது சமூகம் என்றுமே வறுமையில் இருக்கும். மலையகத்தில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற பாடசாலைகளுடன் முன்னிறுத்தி மலையகக் கல்வி பெரிதளவில் பின்னடைவில் இல்லை என சிலர் கூறிக்கொள்ளலாம். ஆனால் ஆரம்பக் கல்வியை வழங்கும் தோட்டப்புற பாடசாலைகளின் உண்மை நிலையை கண்டும் காணாதது போல் இருப்போமாயின் நாம் எமது சமூகத்துக்கு துரோகம் இழைத்தவர் ஆவோம். அன்று கலஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் நான் பெற்ற சிறப்பான ஆரம்பக் கல்வி இருந்திருக்காவிட்டால் நான் என்றோ தொலைந்து போயிருப்பேன். ஒவ்வொரு மாணவனுக்கும் தரமான பாடசாலை சார்ந்த இலவச கல்வியை பெறுவதற்குரிய கட்டமைப்பை மீண்டும் உருவாக்க பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களும், சமூக நலன் விரும்பிகளும் எமது சமூகத்தில் வலியுறுத்த வேண்டும். பெரும்பாலான சமூகங்கள் டியூஷன் சார்ந்த கல்வியில் தங்கியிருக்கும் போது மலையகம் அதற்கு படிப்பினை ஊட்டுவதாக பாடசாலை சார்ந்த கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைவருக்குமான சமத்துவ கல்விக்கு அது ஒரு முக்கிய அடிப்படையாகும். நாமே அதற்கான வழியை தேடி தீர்வைப் பெற வேண்டும். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்றார் வள்ளுவர். இக்குறளை உண்மையாக்குவது எமது கையில் உள்ளது.
நான் எனது உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் கண்டி புனித அந்தோணியார் கல்லூரியில் பெற்றேன். வறுமையான நான் எப்படி அந்தோணியார் கல்லூரியில் சேர்ந்தேன் என நீங்கள் நினைக்கக்கூடும். அக்கல்லூரியில் சேர்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு கூட எனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார நண்பரின் குடும்பத்தினருடனேயே செல்ல வேண்டியிருந்தது. நான் எனது பாடசாலையில் சாதாரண தரத்தில் மிகச்சிறந்த சித்தி பெற்றிருந்ததே எனக்கிருந்த ஒரே தகமை ஆகும். இருப்பினும் புனித அந்தோணியார் கல்லூரியில் சேர்வதற்கு ஐந்தாயிரம் ரூபாய்கள் நன்கொடை கட்டுமாறு கேட்கப்பட்டபோது எனது உயர்தரக் கல்வி கனவு முடிவுக்கு வருவதாக உணர்ந்தேன். இருப்பினும் எனது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் அந்தக் கட்டணத்தை கட்டினர். அக்காலத்தில் கலஹாவில் இருந்து எனது கல்லூரிக்கு வருவதற்கு மூன்று மணித்தியாலங்கள் எடுத்தன. இது எனது கல்விக்கு தடையாக அமைந்தது. கட்டுகஸ்தொட்டையில் தங்கியிருந்து படிப்பதே ஒரே வழியாக இருந்தது. ஆனால் எனது மாதாந்த உணவு மற்றும் தங்குமிடம் கட்டணமான அறுநூறு ரூபாய் கட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. மீண்டும் ஒருமுறை எனது கல்வித்தகமை எனக்கு கை கொடுத்தது. கண்டி அசோகா வித்தியாலய ஸ்தாபகர்களால் வழங்கப்பட்ட அன்னை புஷ்பம் ராஜன் புலமைப் பரிசலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் மூலம் மாதாந்தம் எனக்கு நாநூறூ ரூபாய்கள் கிடைத்தது. இந்த அமைப்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். எனது தாயார் தனது குடும்பச் செலவில் சேமித்து எனக்கு மாதாந்தம் ஒரு சிறு தொகை தருவார். புனித அந்தோனியார் கல்லூரியில் எனக்கு மீண்டும் ஒரு முறை சிறந்த ஆசிரியர்களும் கல்வியும் கிடைத்தது. இன்று எத்தனையோ மாணவர்கள் பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இடைநிறுத்தி உள்ளனர். அன்று கலஹாவில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரக் கல்வி கிடைத்திருக்குமாயின் நான் பெரும் பொருளாதார சுமைக்கு மத்தியில் கண்டிக்கு சென்றிருக்கத் தேவையில்லை. ஆனால் இன்றும் அந்த அவல நிலை தொடர்வதே வருத்தத்துக்குரிய விடயமாகும். கண்டி மற்றும் சூழ்ந்திருக்கும் மாவட்டங்களில் மலையக மாணவர்களுக்கென போதுமான எண்ணிக்கையிலான, எமது சமூகப் பொருளாதாரத்திற்கு ஏற்ற, தரமான தமிழ் மொழி மூல விஞ்ஞான, கணித உயர்தர பாடசாலைகள் இல்லாது இருப்பதற்கு யாரை குறை சொல்வது என்பதை நீங்களே தீர்மானியுங்கள். நான் உயர்தரம் கற்ற காலத்திலிருந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல் காலம் சென்றுள்ளது. ஆங்காங்கு ஓரிரு பாடசாலைகள் இருப்பினும் இன்றும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான, முழுமையான விஞ்ஞான, கணித உயர்தரக் கல்விக்கு வழியில்லை என்பது நாம் எவ்வளவு பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சான்று பகர்கின்றது. மூலக்கூற்று உயிரியல் புரட்சி (Molecular Biology Revolution), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), செவ்வாயில் குடியேற்றம் (Settlement on Mars), சுயமாக ஓட்டும் கார்கள் (Self-driving cars) என்று உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கும் போது நாம் இன்னும் எமது பாடசாலைக்கு நடந்து செல்வதற்கான பாதையை சரி செய்து தருமாறு அரசியல்வாதிகளிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றோம்!
கீழ் தொடரும் உள்ளடக்கம் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது என எண்ணுகிறேன். இன்று எனது நிலைக்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியது. தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடித்தமான பாடம். அதேபோல் ஆங்கிலத்திலும் நான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆரம்பகாலம் முதலே ஆங்கில பத்திரிகை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. அதே நேரம் எனக்கு சிறந்த ஆங்கில ஆசிரியர்களும் கிடைத்திருந்தனர். சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாடத்தில் நான் அதிசிறந்த சித்தி (Distinction) பெற்றபோது பாடசாலை முழுவதும் அது பெரும் பேச்சாக இருந்தது. எனது ஆங்கில புலமை புனித அந்தோணியார் கல்லூரியில் எனது வகுப்பில் பிரபல்யமாவதற்கு உதவியது. நான் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இளங்கலை பட்டத்துக்காக ஆங்கில மொழியிலான கற்றலுக்கு தெரிவான ஐந்து பேரில் நானும் ஒருவன். இந்த ஆங்கில மொழிப் புலமை இன்றில், இன்று அமெரிக்காவில் பேராசிரியர் பதவிக்கு வந்திருக்க முடியாது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் சிறிது காலம் கண்டியில் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆங்கிலத்தில் இரசாயனம் கற்பித்தேன். ஆங்கிலத்தில் இரசாயனம் கற்பிக்க முடிந்ததால், செல்வந்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக கற்பித்தேன். அதற்கு அவர்கள் நான் என்றும் கண்டிராத பணத்தை தந்தனர். என் கையில் பணம் புழங்க தொடங்கியது. நாம் வாழ்ந்த வாடகை வீட்டை வாங்கியதுடன் ஒரு நிலத்தில் முதலீடு செய்யவும் முடிந்தது. எங்கள் குடும்ப வறுமை விலகத் தொடங்கியது. இதற்குக் காரணமான எனது ஆங்கில ஆசிரியர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவன். அப்போதிருந்து வறுமை எனும் கொடிய அரக்கனிடமிருந்து எனது கல்வி என்னை பாதுகாக்க தொடங்கியது. எமது மாணவர்கள் சிறுவயது முதல் ஆங்கிலத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு பெற்றோரும் உதவ வேண்டும். ஆங்கிலத்தில் புலமை பெறுவதற்கு பல்வேறு வழி வகைகளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. எனக்கு அமைந்தது போல், ஆர்வம் இருப்பின், உங்கள் சமையலறையில் இருக்கும் மளிகை சுற்றிய பத்திரிகையும் ஒரு சிறந்த ஆசானாக அமையும். ஆங்கில செய்திகளை கேட்பதன் மூலம் ஆங்கில உச்சரிப்பு, வாக்கிய கட்டமைப்பு போன்றவற்றை கற்கலாம். உங்களது சக நண்பர்களுடன் ஆங்கிலத்தில் கூச்சமின்றி உரையாட முற்படலாம். சமூக வலைத்தள காலத்தில் வாழும் உங்களுக்கு இவற்றை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. ஆனால் எனது ஆங்கில புலமைக்கு இவை முக்கிய காரணமாக அமைந்திருந்தன. அண்மையில் நான் இலங்கை வந்திருந்த போது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் எனது குடும்பத்துடன் ஒரு உயர்தர உணவகத்திற்கு சென்றிருந்தேன். எனது குடும்பத்தினர் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்கு உணவு பரிமாறியவர் நான் எந்தத் தோட்டத்தின் துரை என்று சிங்களத்தில் என்னை கேட்டபோது எனக்கு சிரிப்பாய் இருந்தது. நான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தபோது ஒருமுறை மலையகத்தை சாராத ஒரு தமிழ் அன்பர் எனக்கு தோட்டத் துரை பிறப்புச் சான்றிதழ் வழங்கவில்லை என கேலி செய்தார். இப்போது எனக்கு கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகிறது “உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்”. இப்போது எனக்கு கிடைக்கும் மதிப்பு கல்வியால் வந்ததாகும். அதைப் பெற்றுக் கொள்வது எமது கையிலேயே உள்ளது.இங்கு நான் எமது சமூகத்தில் உள்ள ஒரு வருந்தத்தக்க பழக்கத்தை கூற விரும்புகிறேன். எமது சமூகத்தில் பலர் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது வழமையாக நாம் எமது சாதி, பணபலம், அந்தஸ்து போன்றவற்றை காட்டிக் கொள்வதற்கு முனைவோம். ஆனால் அமெரிக்க கலாச்சாரத்தில் இவ்வாறான அறிமுகப்படுத்தலை காண முடியாது. ஒருவரை ஒருவர் மதிப்பது (Individual respect) என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உதாரணமாக எனது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் கழிப்பறை சுத்தம் செய்பவருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த தயங்கமாட்டார். ஆனால் எமது சமூகத்தில் நமது அந்தஸ்துக்கு குறைந்த ஒருவரின் வீட்டில் தண்ணீர் அருந்துவது கூட அரிது. மனிதநேயம் மிக்க சமூகமாக மாற கல்வியே எமக்கு உதவக்கூடும். இவ்வாறான சமூக சீர்திருத்தங்களுக்கு கற்றறிந்தோர் முன்னின்று உழைக்க வேண்டும்.
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு எனக்கு மகாபொல புலமைப் பரிசிலும், சத்யோதயம் எனும் தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலும் பெரிதும் உதவியது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இலவச தங்குமிட வசதியும் தரப்பட்டது. நாம் எமது கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்வோமாயின் மேலும் கற்பதற்கான வழிவகைகள் உள்ளன. நான் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும் ஒருபோதும் அதி திறமை வாய்ந்த மாணவனாக இருந்ததில்லை. அவ்வாறு இருந்திருப்பின், நான் இலங்கை கல்வி கட்டமைப்பின்படி இன்று மருத்துவராக இருக்க வேண்டும். ஒருவர் மருத்துவர் அல்லது பொறியியலாளராக வேண்டுமென என நோக்கம் கொண்டிருப்பது தவறில்லை, ஆனால் அதற்குத் தேர்வடையாவிடில் உங்கள் கல்வி முடிவுக்கு வந்து விட்டதென நீங்களும் சமூகமும் எண்ணுவதே தவறு. நான் ஒப்பீட்டளவில் பாடசாலையிலும், பல்கலைக்கழகத்திலும் திறமையான மாணவராக இருந்திருந்தாலும் என்னை விட அதிசிறந்த திறமையானவர்கள் வெளியில் இருந்தனர். எவ்வாறிருப்பினும் ஆர்வத்துடன் பெருமுயற்சி கொண்ட மாணவனாக நான் இருந்தேன். இந்த ஆர்வமும் முயற்சியுமே அமெரிக்காவில் பேராசிரியராவதற்கு உதவியது. ஆதலினால் மாணவர்கள் பரீட்சையில் எதிர்பார்த்த சித்தி கிடைக்காவிடினும் தமக்குரிய திறமையையும், வாய்ப்பையும் அடையாளம் கண்டு அவ்வழியில் ஆர்வத்துடனும் முயற்சியுடனும் முன்னேற முனைய வேண்டும். பெற்றோரும், உறவினரும், சமூகமும் இம்முயற்சிக்கு தடையின்றி ஆக்கபூர்வமாக உதவ வேண்டும்.
இலங்கையில் உறவினர்களும் நண்பர்களும் உயர்ந்த இடத்தை அடைவதற்கு சலுகை வழங்கப்படுவதை (nepotism and cronyism) நாம் கண்டுள்ளோம். நான் அமெரிக்கா வந்தபோது எனக்கு எந்த ஒரு உறவினரோ, நண்பரோ இருக்கவில்லை. எனது கல்வித் தகமையும், ஆங்கிலப் புலமையுமே என்னுடன் இருந்தது. அத்துடன் என் முன்னே நான் முன்னர் குறிப்பிட்ட “அமெரிக்க கனவு” இருந்தது. அமெரிக்க வாழ்க்கை உயர்ந்தது அல்லது அமெரிக்காவில் பாகுபாடு முற்றிலும் இல்லை என்று நான் இங்கு வாதாடவில்லை. என் வாழ்க்கையில் நான் கண்டவற்றையே இங்கு முன் வைக்கிறேன். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராவது கடினமான விடயம் ஆனால் சாத்தியமற்றது அல்ல. எனது தொழில் துறையான உயிரியல் இரசாயனவியலில் கலாநிதி (Doctoral degree / PhD) பட்டம் பெற்று, அதை சார்ந்த மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டு அது சார்ந்த அறிவியல் வெளியீடுகளை (Scientific publications) மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எமது தகமைக்கேற்ப, வெளிப்படையாக அறிவிக்கப்படும் பல்கலைக்கழக வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகள் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றி பணி மேலாய்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த மேலாய்வில் தேர்ச்சி பெறாவிடில் பணியில் இருந்து நீக்கப்படலாம். மேலாய்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் பணி நிரந்தரமாக்கப்படுவதுடன் இணைப் பேராசிரியராக (Associate Professor) தரம் உயர்த்தப்படுவர். எமது கற்பித்தலும் ஆராய்ச்சியிலும் சிறந்திருந்தால் அதை மதிப்பிட்டு பேராசிரியராக (Professor) தரம் உயர்த்தப்படுவர். நான் இப்போது பேராசிரியர் பதவியில் உள்ளேன். ரொட்டித் துண்டும் தேங்காய் சம்பலும் சாப்பிட்டு, மாட்டுச் சாணத்தில் மெழுகிய தரையில் படுத்துறங்கிய அனுபவமும் எனக்கு உண்டு. அந்நிலையில் இருந்து இந்த நிலையை அடைவதற்கு எத்தனையோ தடைகளை கடந்துள்ளேன். எனவே இன்று உங்கள் நிலையை எண்ணி கவலை அடையாது அறிவுபூர்வமாக சிந்தித்து, சரியான முடிவை சரியான தருணத்தில் எடுத்து, ஆர்வத்துடனும் முயற்சியுடனும் எமது குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும். இக்கட்டுரையை வாசிக்கும் கற்றறிந்தோர் எமது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தம்மால் முடிந்த வழிகளில் உதவ வேண்டும். எமது சமூகத்தில் நடக்கும் கலாச்சார களியாட்ட விழாக்களுக்கு பணம் செலவழிக்கும் அதே நேரத்தில் எமது சமூகத்தின் கல்விக்கு நாம் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உதவலாம். இது ஒரு சமூகத்திற்கான முதலீடாகும். சொந்த வாழ்க்கையை நேர்மையான முறையில் மேம்படுத்தாவிடில் அவ்வாழ்வில் பலனில்லை. அதே போல் சுயநலமான வாழ்க்கை வாழ்வதிலும் பயனில்லை. இதுவரை நான் ஏறத்தாழ இருபது தகுதி வாய்ந்த இலங்கை பட்டதாரிகளுக்கு நான் கற்பிக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் முதுகலை பட்டம் பெறுவதற்கு நான் வழிகாட்டி உள்ளேன். அவர்கள் அனைவரும் இன்று தமது முயற்சியால் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பலர் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளனர். தற்போது மலையகத்தில் பல விஞ்ஞான பட்டதாரிகள் இருப்பினும், அவர்களில் ஒருவர் தானும் இந்த முதுகலை பட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அதனை அறிந்தோர் எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தாலும் இக்கட்டுரையின் மூலம் எனது தனிப்பட்ட வாழ்க்கையை முன்வைத்து கல்வியின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தவே இங்கு முனைந்தேன். ஒவ்வொரு மாணவனும், சமூகமும் தன்னம்பிக்கையுடனும், முற்று முழுதான முயற்சியுடனும் தமது கல்வியின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். அதேபோல் எமது சமூகமும், எனக்கு கிடைத்தது போல், பல்வேறுபட்ட புலமைப் பரிசில்களையும், உதவித் திட்டங்களையும் ஏற்படுத்தி வறுமை மிகுந்த மாணவர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டும். உங்களது உள்ளூர் பாடசாலையில் கற்பிக்க ஆசிரியர் இல்லை என அரசியல்வாதிகளிடம் கையேந்தி காத்திராது, பெற்றோர், பழைய மாணவர், நலன் விரும்பிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து எமது மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உரிமையை பெற்றுத்தர வேண்டியது எமது சமூகத்தில் உள்ள கற்றோரின் கடமையாகும். மலையக சமூகத்தில் பணம் படைத்த, நல்லெண்ணம் கொண்ட வர்த்தகர்கள் பலரும் உள்ளனர். கொடையுள்ளம் கொண்டோரும் சமூக நலன் விரும்பிகளும் திட்டமிட்டு ஒன்றிணைவோமாயின் மறுக்கப்பட்டுள்ள எமது மலையகக் கல்வியை பிறிதொருவர் தரும் வரை காத்திராது நாமே பெற்றுக் கொள்ளலாம். எனவே கல்வியால் நாம் முன்னேற வேண்டுமெனில் நாம் என்ன செய்யலாம்? கீழே எனது எண்ணத்துக்கு வந்த சில கருத்துக்கள்:
- மாணவர்கள்: (i) கற்பதை சந்தேகம் இன்றி கற்றுக் கொள்ளுங்கள். குழுவாக இணைந்து, உள்ள வளங்களை பகிர்ந்து குறுந்தூர, இடைத்தூர, நெடுந்தூர இலக்கு என கால வரையறைக்குட்பட்ட கற்றல் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சியுங்கள். (ii) கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற விடயங்களை தவிருங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, சினிமா பார்த்தல், முழுமையான கிரிக்கெட் போட்டி பார்த்தல் (ஹைலைட்ஸ் மாத்திரம் பார்க்கலாம்), முகநூல் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் காலத்தைக் கழித்தல் போன்றவை. நானும் அக்காலத்தில் சினிமா பார்ப்பதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும், பார்ப்பதிலும் காலத்தை செலவிட்டுள்ளேன். ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒருநாளும் நான் கல்வியை தவிர்த்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
- ஆசிரியர்கள்: உங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. ஆனால் நானும் உங்களைப் போலவே ஒரு சக ஆசிரியன். எனவே இக்கருத்தை தோழமையுடன் ஏற்றுக் கொள்ளவும். ஏற்கனவே நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது எனக்கு தெரியும். உங்களுக்கே தெரியும் நீங்கள் ஒரு சமூக மாற்றத்தின் பிரதான காரணியாகும். ஆசிரியர் சமூகத்தின் அர்ப்பணிப்பை பன்மடங்காக மாற்ற நீங்கள் ஒரு கருவாக செயற்படலாம். மாணவர்களுக்கு கல்வி இலக்கை நிர்ணயித்து சக ஆசிரியர்களுடன் ஒன்றுபட்டு அவற்றை அடைய முயற்சிக்கலாம். பெற்றோரையும் சமூகத்தையும் ஒன்றுபடுத்தி உங்களுக்குத் தேவையான கல்விக்குரிய வளத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
- பெற்றோர்: (i) உங்கள் குழந்தையின் கல்வியில் அக்கறை காட்டுங்கள். தினமும் அவர்கள் என்ன பாடசாலையில் கற்றார்கள் என கேளுங்கள். அவர்கள் கற்றதை உங்களுக்குக் கற்பிகுமாறு கேளுங்கள். அவர்கள் ஏதாவது சாதித்து இருந்தால் பாராட்டுங்கள். அவர்கள் ஏதாவது சவாலை எதிர்கொண்டிருந்தால் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். (ii) உங்கள் குழந்தையின் ஆசிரியர்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்களை சந்தித்து குழந்தையின் அபிவிருத்தியை தெரிந்து கொள்ளுங்கள். ஆசிரியர்களின் சேவையை மதித்து அவர்களுக்கு நன்றி உடையவர்களாக அவர்களுடன் நட்பை பேணுங்கள். (iii) சக பெற்றோருடன் இணைந்து ஆசிரியர்கள் கற்பிப்பதில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு உதவுங்கள்.
- சமூகம்: உங்கள் பாடசாலையின் தரமே, உங்கள் சமூகத்தின் தரம். எனவே உங்கள் சமூகத்தின் பாடசாலையை தரம் உயர்த்துவது உங்கள் கடமையாகும். உங்களுக்கு ஏதாவது ஒரு திறமை இருக்கலாம். அதைத் தொண்டராக நீங்கள் அப் பாடசாலைக்கு அர்ப்பணிக்கலாம். நீங்கள் பணவசதி படைத்தவர் எனில், உங்களது குழந்தை அப்பாடசாலையில் கற்காவிடினும், பொதுநலம் கருதி பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவலாம். மலையகத்தில் கல்விக்காக சேவையாற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் (உதாரணமாக STEM Team Hatton ) உள்ளன. சமூக வலைத்தளங்களில் அவ்வாறான நிறுவனங்களின் தகவல்களைப் பெற்று கல்விக்கான உதவியை உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். வசதிபடைத்த மலையக வர்த்தகர்களை அணுகி, ஒருங்கிணைந்த கல்வி அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுசரணையை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் மலையகத்தின் வர்த்தக சமூகம் மலையக மக்களின் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளதால் மலையக மக்களின் அபிவிருத்தி, வர்த்தகர்களின் அபிவிருத்திக்கு உதவும். எனவே அவ்வர்த்தக சமூகம் இதை ஒரு முதலீடாகவே கருத வேண்டும். வெளிநாடுகளில் வாழும் நலன் விரும்பிகளின் உதவியை நாடி, பல மாணவர்களை சென்றடையும் பன்முகப்பட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளலாம்.
எம் முன்னே எத்தனையோ தடைகள் இருப்பினும், திட்டமிட்ட முறையில் அவற்றை ஒவ்வொன்றாக நீக்குவதற்கான ஆக்கபூர்வ முயற்சியில் ஒன்றுபட்ட சமூகமாக நாமே ஈடுபட வேண்டும். எமது சமூகத்தின் அபிவிருத்தியில் உண்மையான நலம் கொண்ட தலைமைத்துவத்தின் உதவியுடன் எமக்கு மறுக்கப்பட்டுள்ள கல்வியைப் பெற்றுக் கொள்வோமாயின் அது மலையக சமூகத்தின் இருநூறு வருட கால வறுமை மிகுந்த அறியாமை வாழ்க்கைக்கு முடிவு கட்டும்.
பேராசிரியர் கோபால் பெரியண்ணன்
அமெரிக்கா