நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டுக்கு உட்பட்ட நாகசேணை நு/ சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட கற்றோர் பேரவையின் ஏற்பாட்டில் “மீண்டும் பள்ளிக்கு செல்வோம்”என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கற்றோர் பேரவையின்தலைவர் பி.தியாகராஜா தலைமையில் வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு 29.09.2024 அன்று வித்தியாலய அதிபர் என்.சிவலிங்கம் வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து பழைய மாணவர்களும் சிறுவயதில் எவ்வாறு இவ் வித்தியாலயத்திற்கு சமூகமளித்திருந்தனர் அதை போன்று இந்த நிகழ்வில் புத்தகப்பையுடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு வருகை தந்த பழைய மாவர்கள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்றதோடு இவர்களுக்கு ஆரம்பத்தில் கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகம் தந்து வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டமை சிறப்பு அம்சமாகும்.
இதன் போது பழைய மாணவர்கள் அவர்களுடைய கற்றல் காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதேபோன்று இந்நிகழ்வில் மாணவர்கள் போல் தங்களுடைய செயல்பாட்டை முன்னெடுத்தனர்.
அத்துடன் கற்றல் பேரவையின் நிதியினூடாக அமைக்கப்பட்டிருந்த “ஸ்மார்ட்” வகுப்பறையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன்,
பழைய மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வை அலங்கரித்தன.
அத்தோடு கற்றுத்தந்த ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு வரும் பொழுது பழைய மாணவர்களை கட்டி தழுவி முத்தமிட்டு தங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் என் சிவலிங்கம். மற்றும் கல்வி அதிகாரிகள் கற்றோர் பேரவையின் செயலாளர் எஸ் கௌசல்யா, பொருளாளர் எஸ் எலெக்சாண்டர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன்
மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேசத்தில் உள்ள அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கௌசல்யா.