மஸ்கெலியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் “மாணிக்கம் அறக்கட்டளை” ஊடாக பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில் வழகும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆந் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மஸ்கெலியா ஸ்ரீமகள் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
“மாணிக்கம் அறக்கட்டளை” நிறுவனர் எம். சதாசிவம் தலைமையில் நடைபெறும் குறித்த நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் பிரதம அதிதியாகவும், அவரோடு மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டார்.
பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் 20 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா பிரதேசத்தில் வருடந்தோறும் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்களை கௌரவித்து ஊக்குவித்து வரும் மாணிக்கம் அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கி வருவதோடு, கல்வித் துறையில் சிறந்த சேவையாற்றி ஓய்வு பெறும் அதிபர், ஆசிரியர்கள், கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்படும் உத்தியோகத்தர்கள், பதவி உயர்வு பெறுகின்ற கல்வியியலாளர்கள் போன்றோரை அவ்வப்போது பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றார். பல்கலைக் கழக மாணவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.













