நுவரெலியா மாநகர சபை வாலாற்றில் முதன் முறையாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு என தனியான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகா சபையின் பிரதி தலைவர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாநகர சபையின் கன்னி அமர்வு நேற்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் உபாலி வணிகசேகர தலைமையில் நடைபெற்றது. இதன் போது வழமையான சபை நடவடிக்கையின் படி மாநகர சபைக்கான குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
நுவரெலியா மாநகர சபைக்கு நிதி தொடர்பான குழு, வேலைப்பகுதிக்கு பொறுப்பான குழு, சுகாதார துறைக்கு பொறுப்பான குழு. விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான குழு, பாதை, மின்சார விளக்குகளை பராமரிப்பதற்கான குழு என வழமை போல ஐந்து குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
இதன் போது பெருந்தோட்டங்களின் அபிவிருத்தி தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் நுவரெலியா மாநகர சபையின் முதல்வரின் கவனத்துக்கு பிரதி தலைவர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா கொண்டு வந்தார்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இதுவரையில் இல்லாதிருந்த ஒரு குழுவை அமைப்பதற்கு சபை முதல்வர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு அமைய நுவரெலியா மாநகர சபையில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு என தனியான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vs கார்த்திக்
