கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள் கொண்டு வருவதாகும்
ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற “சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
” சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார்.
பின்னர் ” சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை,
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம்.
தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது.
மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை.
எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள்.
எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர்.
எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது.
வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலக்குமயப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்று உணர வேண்டும்.
ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா? அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை உள்ளது.
