இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் மொஹமட் நபி அதிரடியாக துடுப்பாடி இறுதி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 60 ஓட்டங்களையும், அணியின் தலைவர் ரஷீத் ஹான் மற்றும் இப்ராஹிம் ஸ்ன்ட்ரா தலா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் துஷார 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குஷால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், குஷால் பெரேரா 28 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் குழு Bயிலிருந்து இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
