வெளியேற்றப்பட்ட ராகலை நடுக்கணக்கு மக்களுக்கு மீண்டும் அதே வீடுகளை வழங்குவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை
இரா.ஜீவன் இராஜேந்திரன்
இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கிய மலையக சமூகத்தின் உறவுகளான இராகலை நடுக்கணக்கு தோட்டத்தை சேர்ந்த 06குடும்பங்கள் குறித்த தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு சொந்த பணத்தில் வீடமைத்து சுமார் 30 வருடங்களாக வாழ்ந்து வாழ்விடத்திலிருந்து இலங்கை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நீதிமன்ற வழக்கொன்றை தாக்கல் செய்து தீர்ப்பின் அடிப்படையில் எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வெளியேற்றியுள்ளமையானது மலையக பெருந்தோட்டத் துறையில் 200 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது ஆகவே பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு காணி அமைச்சரும் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறிவர்களை வெளியேற்றுவதில் அமைதிகாக்கும் அரச நிறுவனங்கள் பெருந்தோட்டத்திற்கு நடுவில் அடுத்த அங்குலம் காணி நடுக்கணக்கு தோட்டத்திற்கு சொந்தமாக இருக்கும்போது ஆறு வரிசைவீடுகளை கொண்ட சிறிய அளவிலான காணியை கையகப்படுத்தியதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின்(LRC) இந்த நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது
மேலும் குறித்த குடும்பங்கள் அத்துமீறி அந்த இடத்தில் குடியேறவில்லை தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு குடியேறியுள்ளனர் இந்த முப்பது வருடத்தில் தங்களின் நீண்டகால உழைப்பில் எஞ்சிதொகையான EFF பணத்தை செலவிட்டே அந்த வீடுகளை திருத்தியமைத்துள்ளார்கள் திருத்தப்பணிகளுக்கு ஒருவர் 50இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை செலவுசெய்துள்ளார் ஏனையோர்களும் பல லட்சக்கணக்கான ருபாய்களை செலவு செய்துள்ளார்கள் இவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கிய அவர்களுடைய வாழ்விடத்திற்கு அந்நியராக்கிவிட்டு அந்த வீடுகளை உடைத்துதரைமட்டமாக்குவதினால் யாருக்கு என்ன இலாபம்?
எது எப்படியோ வழக்கு முடிந்து தீர்ப்பு நிறைவேற்றப்பட்டவிட்டது அந்த அப்பாவி குடும்பங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்நாட்டு க்காக உழைத்துக்கொடுத்த அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் அந்த குடும்பங்களுக்கெதிரா சட்டநடவடிக்கைகளில் நிறைவுக்கு வந்துவிட்டன இப்போது அந்த நிலம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு(LRC) சொந்தமாகியுள்ளன இனி அந்த இடம் தொடர்பாக காணி அமைச்சரும் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் காணி அமைச்சர் அந்த இடத்தை மீண்டும் குறிப்பிட்ட குடும்பங்களுக்கு வழங்குவதில் எந்த சட்டசிக்கலும் இல்லை என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர் அப்படியென்றால் அந்த இடத்தை மீண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்குவதற்கான முடிவை காணி அமைச்சர் ஏன் எடுக்கக்கூடாது? ஆகவே பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் கெளரவ கே.டி.லால்காந்த அவர்கள் சாதகமான முடிவொன்றை எடுப்பார் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்தார்.
