இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 21 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.
இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இத்தொகையில் 17 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்பதுடன், 22 லட்சத்து எட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இதன்படி முதியோர் தொகையில் 56 சதவீதமானோர் பெண்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, 2026ஆம் ஆண்டில் 45 ஆயிரம் முதியோர் அடையாள அட்டைகளை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், வரும் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களைப் புனரமைத்து, அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
