புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான புரட்சிகர மக்கள் சக்தியின் ஆறாவது ஆண்டு நிறைவு நிகழ்வு (28) தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மற்றும் தோட்ட மட்ட அமைப்பாளர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கட்சியின் எதிர்கால அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கான பதவிகளும், புதிதாக இணைந்த அங்கத்தவர்களுக்கான பொறுப்புகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
குறிப்பாக, மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் புரட்சிகர மக்கள் சக்தி, இந்த ஆண்டில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுகால அரசியல் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள புரட்சிகர மக்கள் சக்தி, தனது அமைப்பு கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தி, மக்களின் உரிமைகளுக்கான அரசியல் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு நிறைவு நிகழ்வை முன்னெடுத்திருந்தது.
