இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று சீதுவையில் உள்ள பொதிகள் அனுப்பும் சேவையொன்றில் இருந்து 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘மேஜிக் மஷ்ரூம்ஸ்’ எனப்படும் போதை வகைகள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் இருந்து ஒன்பது பொட்டலங்கள் மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் போலியான முகவரிகளுக்கு பொதிகள் அனுப்பப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து குறித்த பொதிகளை தடுத்து வைக்குமாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் திறந்து ஆய்வு செய்ய முடிவு செய்ததாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த ஒன்பது பொதிகளில் 4 கிலோ கஞ்சா,குஷ்வகை போதைப்பொருள் , 300 கிராம் மேஜிக் காளான், 2,000 எக்ஸ்டசி மாத்திரைகள் (எம்.டி.எம்.ஏ.) மற்றும் போதை கலந்த சில சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது.
சைலோசைபின் காளான்கள் எனப்படுவது பொதுவாக மேஜிக் காளான்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை சைலோசைபின் கொண்ட ஒரு பாலிஃபைலெடிக் முறைசாரா பூஞ்சை ஆகும், இது உட்கொண்டவுடன் சைலோசினாக மாறும். அவை பொழுதுபோக்கு போதை மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் குறித்த பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சிரேஷ்ட பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கார்த்திக் நாயகம்
