இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி புதன்கிழமை வெளியிட்டது.
இந்த அட்டவணையின் படி இந்திய அணியின் இரண்டு குழு நிலைப் போட்டிகளின் திகதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
போட்டி திடடமிட்டபடி அகமதாபாத்தில் நடைபெறும்.
இந்தியா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நவம்பர் 11 இல் இருந்து நவம்பர் 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக ஒக்டோபர் 14 ஆம் திகதி திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறும்.
ஒக்டோபர் 12 ஆம் திகதி திட்டமிடப்பட்ட இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்.
ஒக்டோபர் 13 ஆம் திகதி திட்டமிடப்பட்ட தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 12 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும்.
ஒக்டோபர் 14 ஆம் திகதி திட்டமிடப்பட்ட நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒக்டோபர் 13 ஆம் திகதி சென்னையில் இடம்பெறும்.
ஒக்டோபர் 5, வியாழன் அன்று 2019 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதும் போது 2023 உலகக் கிண்ணம் தொடங்குகிறது.
அதே மைதானத்தில் நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெறும்.


