மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.05.02.2024.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் கடந்த 03 ம் திகதி தோட்ட காணியில் இருந்த கருப்பந்தைல மரத்தை வெட்டிய போது அம்மரம் சாய்ந்து மேலும் ஒரு மரத்தில் விழுந்த வேளையில், அதன் கிளை ஒன்று முறிந்து அவ் வீதியூடாக சென்ற நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் முருகன் அஷான்மீது விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வேளையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நாவலப்பிட்டி பகுதியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அருகில் உள்ள நாவலப்பிட்டி வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டு, இன்று மதியம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொகலதெனிய தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தம் பற்றி விரிவாக விசாரணை நடத்தி, சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் ஐந்து பேரும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இவ் ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
