தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுகம், பதுளை மாவட்ட அமைப்பாளர் நியமனம் என்பவற்றிற்கான மாபெரும் பொதுக்கூட்டம் (07/04) பதுளை நிமல் சிறிபால டி சில்வா தபாலக கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரபல சமூக சேவையாளரும் , வர்த்தகருமான பகி பாலச்சந்திரன் மலையக மக்கள் முன்னணியில் அங்கத்துவம் பெற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட அமைப்பாளராகவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின் சார்பாக களமிறங்கும் வேட்பாளராகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கூட்டணியின் பிரதித் தலைவர்களான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் உட்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் என பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
