பசறை நிருபர். 15.12.2024
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாகவும் பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார மாவட்டத்திற்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வனர்த்த எச்சரிக்கை தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; பதுளை- பசறை வீதி, எல்ல- வெல்லவாய வீதி மற்றும் பசறை- நமுனுகுல வீதி போன்றவற்றில் பயணிக்கும் போது வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக பதுளை- பசறை வீதியின் 6ஆம், 7ஆம், 9ஆம் மைல்கல் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எல்ல- வெல்லவாய வீதியின் 5ஆம், 6ஆம் மைல்கல் பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் உள்ளது . நமுனுகுல வீதியில் கனவரல்ல பகுதியில்மண்சரிவு அனர்த்தம் நிலவுகிறது. இவ் அபாய நிலமையைக் கருத்திற் கொண்டே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் தமது வசிப்பிடங்களுக்கு அருகில் நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட்டு, நிலத்திற்கு அடியில் இருந்து நீர் ஊற்றுகள் ஏற்பட்டு நீர் வெளியேறத் தொடங்கினால் உடனடியாக அருகில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கு அறிவித்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் ஆரம்பமாகும் பலத்த மழை இரவு வரை நீடிக்கின்றது . கடும் குளிருடன் கூடிய பனிமூட்டம் காலை வேளையில் நிலவுவதை பல பகுதிகளில் அவதானிக்க முடிகிறது.
