ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தியில் இன்று (20) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
டயகமவிலிருந்து கண்டி நோக்கி இன்று காலை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தேனீர் குடிப்பதற்காக பத்தனையில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பேருந்தின் பின்புற கதவிலிருந்து பிரதான வீதிக்கு இறங்கிய இரு பயணிகள் மீது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறி மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வட்டவளை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பயணி படுகாயமடைந்த நிலையில் முதலில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
